பிறந்த நாளில் மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கிய பா.ஜ.க. எம்.எல்.ஏ….. தொற்றுநோய் சட்டத்தின்கீழ் நடவடிக்கை…

 

பிறந்த நாளில் மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கிய பா.ஜ.க. எம்.எல்.ஏ….. தொற்றுநோய் சட்டத்தின்கீழ் நடவடிக்கை…

மகாராஷ்டிராவில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி, தனது பிறந்தநாளை முன்னிட்டு வீட்டில் வைத்து மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் தற்போது தொற்றுநோய் சட்டத்தின்கீழ் நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையில்லாமல் வீட்டை வெளியே வரக்கூடாது, மீறி வருபவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மகாராஷ்டிராவில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் ஊரடங்கை மீறி செயல்பட்டதால் தற்போது தொற்று நோய்கள் சட்டத்தின்கீழ் நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார்.

பா.ஜ.க.

மகாராஷ்டிரா மாநிலம் வர்தா மாவட்டத் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. தாதராவ் கெச்சே. இவர் நேற்று தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது வீட்டில் வைத்து மக்களுக்கு இலவசமாக உணவு பொருட்களை வழங்கியுள்ளார். இந்த தகவல் அறிந்து அதிகாரிகளும், காவல்துறையினரும் எம்.எல்.ஏ. வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட மக்கள் உணவு பொருட்கள் வாங்க குவிந்து இருந்தனர். தற்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது தொற்று நோய்கள் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

எம்.எல்.ஏ. தாதராவ் கெச்சே

இந்த சம்பவத்தை உறுதி செய்த மாவட்ட மண்டல் அதிகாரி ஹரிஷ் தர்மில்க் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நடைமுறையில் உள்ள ஊரடங்கை கருத்தில் கொள்ளாமல், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் பா.ஜ.க. எம்.எல்.ஏ. தாதராவ் கெச்சே தனது வீட்டில் வைத்து மக்களுக்கு இலவசமாக வழங்கினார். போலீசாரும், அதிகாரிகளும் அங்கு சென்ற போது குறைந்தபட்சம் 100 பேர் இருந்தனர். அவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர். மேலும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. தற்போது தொற்று நோய்கள் சட்டத்தின்கீழ் நடவடிக்கைகளை எதிர்நோக்கி உள்ளார் என தெரிவித்தார். இது குறித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. தாதராவ் கெச்சே கூறுகையில், இது அரசியல் சதி என குற்றச்சாட்டினார்.