‘பிர்சா முண்டா’ வாழ்க்கை வரலாறு; பாலிவுட்டில் களமிறங்கும் பா.ரஞ்சித்!

 

‘பிர்சா முண்டா’ வாழ்க்கை வரலாறு; பாலிவுட்டில் களமிறங்கும் பா.ரஞ்சித்!

‘காலா’ படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கவிருக்கும் பாலிவுட் திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: ‘காலா’ படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கவிருக்கும் பாலிவுட் திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘அட்டக்கத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமான பா.ரஞ்சித், ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’ ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக மாறினார். அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கிய பா.ரஞ்சித் தற்போது பாலிவுட்டில் களமிறங்கியுள்ளார்.

தொடர்ச்சியாக தான் இயக்கி வரும் திரைப்படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும், ஒடுக்குமுறைக்கு எதிரான குரலையும் தொடர்ந்து பகிர்ந்து வரும் இயக்குநர் பா.ரஞ்சித், பாலிவுட்டிலும் அதேபோன்ற ஒரு கதையை இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

birsamunda

வட இந்தியாவில் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த பழங்குடியின சுதந்திர போராட்ட வீரரான பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை பா.ரஞ்சித் இயக்கவுள்ளார். இப்படத்தை பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான நமா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்துக்கு ‘பிர்சா முண்டா’ என்று தலைப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான களப்பணிகளில் இயக்குநர் பா.ரஞ்சித் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

முன்னதாக பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கப்போவதாக ‘அறம்’ பட இயக்குநர் கோபி நயினார் தெரிவித்திருந்தார். அதற்காக பல ஆவணங்களை திரட்டியிருப்பதாகவும், உச்ச நடிகரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறியிருந்தார். ஆனால், தற்போது பிர்சா முண்டாவின் கதையை இயக்கப்போவதாக பா.ரஞ்சித் தெரிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பா.ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் கதை விவகாரத்தில் ரஞ்சித் மற்றும் ‘அறம்’ பட இயக்குநர் கோபி நயினார் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனினும், பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை யார் வேண்டுமானாலும் படமாக எடுக்கலாம், இருவரும்  திரைக்கதையில் தங்களது வித்தியாசத்தை காட்டுவார்கள் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.