பிரிவினை அரசியல் செய்பவர் ஒற்றுமைக்கான சிலையை திறக்கிறார்: ஜிக்னேஷ் மேவானி சாடல்

 

பிரிவினை அரசியல் செய்பவர் ஒற்றுமைக்கான சிலையை திறக்கிறார்: ஜிக்னேஷ் மேவானி சாடல்

பிரிவினை அரசியல் செய்யும் மோடி ஒற்றுமைக்கான சிலையை திறப்பது விநோதமாக இருக்கிறது என சுயேட்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி பிரதமர் மோடியை சாடியுள்ளார்.

காந்திநகர்: பிரிவினை அரசியல் செய்யும் மோடி ஒற்றுமைக்கான சிலையை திறப்பது விநோதமாக இருக்கிறது என சுயேட்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி பிரதமர் மோடியை சாடியுள்ளார்.

இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் நினைவை போற்றும் வகையில், குஜராத் மாநிலம் ஜாம்நகரர் மாவட்டத்தில் நர்மதை அணை அருகில் அவருக்கு உலகிலேயே மிக உயரமான சிலை அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த சிலை அமைக்கும் பணிக்கு பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டினார். மொத்தம் 787 அடி உயரம் கொண்ட படேலின் சிலை, ரூ.3,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

இந்தியாவில் வறுமையின் பிடியில், பசியால் வாடும் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல் படேலுக்கு ரூ 3,000 கோடியில் சிலை வைப்பது என்பது தேவையற்றது என பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் குஜராத் மாநிலம் வட்கம் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி சிலை திறப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு மனிதரின் மொத்த அரசியலும் பிரிவினையை மையப்படுத்தி இருக்கும் போது அப்படிப்பட்ட நபர் ஒற்றுமைக்காக நின்ற மனிதரின் சிலையை திறப்பதா, என்ன ஒரு விநோதம் என பதிவிட்டுள்ளார்.