’பிராமணர்களே என் படத்தை எதிர்த்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்’…ஒரு இயக்குநரின் கடிதம்…

 

’பிராமணர்களே என் படத்தை எதிர்த்து  உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்’…ஒரு இயக்குநரின் கடிதம்…

இன்றைய சமுகத்தின் மிகக்கொடுமையான அவலமான பாலியல் கொடுமைக்கு எதிராக நடக்கும் ஒரு விசாரணை குறித்துப் பேசுகிறது.

மும்பை: மும்பையில் எதற்கெடுத்தாலும் போராட்டத்தில் குதிக்கும் கர்ணி சேனா அமைப்பினரும் சில பிராமண அமைப்புகளும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு சற்று விநோதமான மன்னிப்புக் கடிதம் எழுதியுள்ளார் ‘ஆர்டிகல் 15’ படத்தின் இயக்குநர் அனுபவ் சின்ஹா.

ayushman

இந்தியா முழுவதும் நாளை ரிலீஸாகவுள்ள ‘ஆர்டிகல் 15’ படம் இன்றைய சமுகத்தின் மிகக்கொடுமையான அவலமான பாலியல் கொடுமைக்கு எதிராக நடக்கும் ஒரு விசாரணை குறித்துப் பேசுகிறது. இப்படத்தின் ட்ரெயிலர் கடந்த மே 30 அன்று ரிலீஸானது. அதை பார்த்த சிலர் படம் பிராமணர்களுக்கு எதிராக இருப்பதாகக் கொளுத்திப்போடவே சில சில்லரை அமைப்புகள் படத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டன. இதை எதிர்பாராத இயக்குநர் நேற்று போராட்டக்காரர்களுக்காக ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் “இந்தக் கடிதத்தின் மூலம் தங்கள் போராட்டங்களில் எல்லை மீறிய அனைவரையும் மன்னிக்கிறேன். எனக்கு வழங்கப்பட்ட மரண அச்சுறுத்தல்கள், எனது சகோதரி மற்றும் தாய்க்குக் கொடுத்த வல்லுறவு அச்சுறுத்தல்கள் மூலம் ஓர் உரையாடல் இருக்க முடியாது. உங்களில் பெரும்பாலோர் இதுபோன்ற எதிர்ப்பை ஆதரிக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். நாம் அனைவரும் சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம், எனவே ஒருவருக்கொருவர் மதிக்க வேண்டும். எனது படமும் அதையே கூறுகிறது.

ஒரு படம் சமூகத்தின் ஒரு பகுதியை அவமதிப்பது அரிது. இதை இந்தி இன்டஸ்ட்ரி சார்பாக எதிர்ப்பாளர்களுக்கு உறுதியளிக்கிறேன். நான் அவர்களை [மற்ற திரைப்பட இயக்குநர்களை] கலந்தாலோசிக்காமல் இதை உறுதிப்படுத்துகிறேன், ஏனென்றால் கடந்த 30 ஆண்டுகளாக அவர்களை எனக்குத் தெரியும்.

anupam sinha

படத்தில் பிராமண சமுதாயத்துக்கு அவமரியாதை இல்லை. படத்தில் பணிந்த நிறைய பேர் பிராமணர்கள், இதில் சில நடிகர்கள் உள்ளனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். என் மனைவியும் ஒரு பிராமணர், எனவே, என் மகனின் இருப்பில் கூட பிராமணர்கள் இருக்கிறார்கள்.

பிராமண சமுதாயம் படத்தில் அவமதிக்கப்படவில்லை என்பதை அனைவருக்கும் உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரஸ் ஷோவுக்கு நிருபர்கள் அனைவரையும் அழைக்கிறேன். ராஜ்புத் சமுதாயமும் படத்தில் அவமதிக்கப்படவில்லை. உங்கள் நேரம் மிகவும் விலைமதிப்பற்றது, நீங்கள் இப்போது வரை செய்து வருவதைப் போல நாட்டின் நலனுக்காகத் தொடர்ந்து நேரத்தைச் செலவழிக்க வேண்டும். தேசத்திற்கு நீங்கள் தேவை. ட்ரெய்லர் காரணமாக ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், நீங்கள் அனைவரும் படத்தைப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். யாருடைய முன்னேற்றத்துக்காக நீங்கள் வீரியமான முயற்சிகளை மேற்கொண்டீர்களோ, இந்தப் படம் அதே நாட்டைப் பற்றியது” எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதே ராஜபுத்திர  அமைப்புகளும் பிராமண அமைப்புகளும் தான் கங்கனா ரனாவத்தின் ‘மணிகர்னிகா’படத்துக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.