பிரபல சாமியார் கல்கி பகவான் ஆசிரமத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை..!

 

பிரபல சாமியார் கல்கி பகவான் ஆசிரமத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை..!

தொடர்ந்து எழுந்த வரி ஏய்ப்பு புகார்களால் வருமான வரித்துறை இந்த அதிரடியான சோதனையை மேற்கொண்டு வருகிறது

கடந்த சில நாட்களாக அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டதில் பல கோடி ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்தது மட்டுமல்லாமல் வரி ஏய்ப்பு நடந்ததையும் வருமான வரித்துறையினர் கண்டு பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நாமக்கல்லில் உள்ள க்ரீன் பார்க் பள்ளி மற்றும் நீட் தேர்வு மையங்களில் அதிகப் பணம் வசூலிப்பதாக எழுந்த புகாரையடுத்து, அப்பள்ளியின் இயக்குநர்கள் வீட்டில் வருமான வரித்துறை அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டனர். அதில். சுமார் 150 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு நடந்துள்ளதையும் 30 கோடி ரூபாய் கணக்கில் வராத பணத்தைப் பள்ளியில் கலையரங்கில் பதுக்கி வைத்திருந்ததும் அம்பலமானது. 

NKV Krishna

அதனைத் தொடர்ந்து, இன்று வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக எழுந்த தகவலின் அடிப்படையில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் பிரபல சாமியார் கல்கி பகவானின் மகன் என்.கே.வி கிருஷ்ணாவிற்குத் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Kalki bhagavan

இதில் சென்னையில் மட்டும் நுங்கம்பாக்கம் உட்பட 20 இடங்களில் சோதனை மேற்கொள்ளப் படுகிறது. ஆந்திர மாநிலம் கோவர்த்தன புரம் பகுதியில் உள்ள கல்கி பகவானின் ஆசிரமத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து எழுந்த வரி ஏய்ப்பு புகார்களால் வருமான வரித்துறை இந்த அதிரடியான சோதனையை மேற்கொண்டு வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது. 

Aashram