பிரபல கவர்ச்சி ‘பிகினி’ மலையேற்ற வீராங்கனை பள்ளத்தாக்கில் விழுந்து பலி-சிகரத்தை எட்டி திரும்பும் போது சோகம்

 

பிரபல கவர்ச்சி ‘பிகினி’ மலையேற்ற வீராங்கனை பள்ளத்தாக்கில் விழுந்து பலி-சிகரத்தை எட்டி திரும்பும் போது சோகம்

உலகளவில் பல லட்சம் பேரின் மனம் கவர்ந்த கவர்ச்சி பிகினி மலையேற்ற வீராங்கனை சிகரத்தைத் தொட்டுத் திரும்பும் போது பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்தார்

தாய்பே(தைவான்): உலகளவில் பல லட்சம் பேரின் மனம் கவர்ந்த கவர்ச்சி பிகினி மலையேற்ற வீராங்கனை சிகரத்தைத் தொட்டுத் திரும்போது  பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்தார்.

தைவானைச் சேர்ந்த மலையேற்ற வீராங்கனை ஜிஜி ஊ(36). மலையேறும்போது அவர் பளிச்சென பல நிறங்களில் கவர்ச்சிகரமான நிச்சலாடையான பிகினியை அணிந்துதான் செல்வார். தனது மலையேற்ற அனுபவங்களை செல்பி எடுத்து சமூகத்தளங்களில் பகிர்ந்து கொள்வார்.

உலகின் பல்வேறு உயர்ந்த மலை உச்சிகளை இவர் தன்னந்தனியாக சென்றடைந்து சாகஸ செல்பிகளை பகிர்ந்து கொள்வார். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரது இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் லட்சக்கணக்கான நண்பர்கள் அவரை பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில் தெற்கு தைவானில் உள்ள ஒரு மலைச்சிகரத்தை அடைவதற்காக 8 நாள்கள் பயணத்தை திட்டமிட்டு அங்கு சென்றார்.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை மாலையில் திடீரென ஜிஜி ஊவின் சாட்டிலைட் போனில் இருந்து அவசரகால மீட்புப்படை அலுவலகத்துக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் ஜிஜி ஊ, தான் மலையேறும்போது கை நழுவி பள்ளத்தாக்கில் விழுந்துள்ளதாகவும் தன்னைக் காப்பாற்ற உதவுமாறும் கூறியுள்ளார்.

இதையடுத்து அவரை மீட்க விபத்து நிகழ்ந்த இடத்துக்கு ஒரு ஹெலிகாப்டரில் மீட்புப்பணி வீரர்கள்  சென்றனர். ஆனால் அப்போது பருவநிலை மோசமாக இருந்ததால் ஜிஜி ஊ விழுந்த கிடத்தை கண்டறியமுடியவில்லை. வேறுவழியில்லாமல் மீட்புக்குழு வெறுங்கையோடு திரும்பியது.

பின்னர் மீண்டும் இருமுறை ஹெலிகாப்டரில் சென்றபோதும் அதே பருவநிலை நிலவியதால் ஜிஜி ஊவை குழுவினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் மழை மேகங்கள் விலகி பருவநிலை சரியானதும் நேற்று பகல் முழுவதும் ஜிஜி ஊவை கண்டுபிடிக்கும் பணியில் மீட்புப்பணி வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். 

வீராங்கனையின் சாட்டிலைட் போனை அவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனிடையே ஜிஜி ஊவின் சடலம் ஆழமான பள்ளத்தாக்கில் பாறைகளின் மத்தியில் கிடந்தது நேற்று பிற்பகலில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.

கடந்த வாரம் வியாழக்கிழமையில் தான் பலியான மலை உச்சியில் இருந்து அழகான நீண்ட ஃப்ராக் அணிந்து ஜிஜி ஊ படம் எடுத்து அதை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் அவர் ‘இந்த நாளை நான் கொண்டாடுகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே வெற்றிகரமாக சிகரத்தை எட்டி விட்டு மலையிறங்கும் போது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

எதிர்பாராத வகையில் ஜிஜி ஊக்கு நிகழ்ந்த இந்த சம்பவத்தால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.