பிரதமர் மோடி விமானத்துக்கு அனுமதி மறுப்பு: பாகிஸ்தானுக்கு வெளியுறவு துறை அமைச்சகம் எச்சரிக்கை

 

பிரதமர் மோடி விமானத்துக்கு அனுமதி மறுப்பு: பாகிஸ்தானுக்கு வெளியுறவு துறை அமைச்சகம் எச்சரிக்கை

பிரதமர் மோடி விமானத்துக்கு அனுமதி மறுத்ததை மறுபரிசீலனை செய்யும்படி பாகிஸ்தானுக்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் எச்சரிக்கை செய்துள்ளது.

அமெரிக்காவில்  ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டம் வரும் 24ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அங்கு செல்ல உள்ளார். இதற்காக பிரதமர் மோடி பயணம் செய்யும் விமானம் பாகிஸ்தான் வான்வழியாக செல்வதற்கு அனுமதி அளிக்கும்படி அந்நாட்டிடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்து இருந்தது. ஆனால் அதற்கு பாகிஸ்தான் அரசு மறுத்து விட்டது.

பாகிஸ்தான் வான்வழி

மேலும், காஷ்மீரில் இந்தியா நிகழ்த்தும் அட்டூழியங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை மனதில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தானின் வெளியுறவு துறை அமைச்சர் குரேஷி தெரிவித்தார். இதற்கு முன் கடந்த வாரம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐஸ்லாந்து செல்ல தனது வான்வழியை பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதி மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.

ரவீஸ் குமார்

இந்நிலையில் பாகிஸ்தான் தனது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி வெளியுறவு அமைச்சகம் கடும் எச்சரிக்கை செய்துள்ளது. நமது வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் இது குறித்து கூறுகையில், இரண்டு வாரங்களில் இரண்டாவது முறையாக விவிஐபி சிறப்பு விமானம் தனது வான்வழியில் பறக்க அனுமதி மறுத்து பாகிஸ்தான் அரசு எடுத்துள்ள முடிவு வருத்தம் அளிக்கிறது. எந்தவொரு சாதரண நாடுகளிலும் சிறப்பு விமானங்கள் செல்ல அனுமதி அளிப்பது வழக்கமானது. 

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை நன்கு கட்டமைக்கப்பட்ட சர்வதேச நடைமுறைகளை அது மீறுவதை வெளிப்படுத்துகிறது. அதே போல் தனது ஒருதலைபட்சமான நடவடிக்கைக்கு பொய்யான காரணங்களை கூறும் பழைய பழக்கத்தையும் பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.