பிரதமர் மோடி பாராட்டிய லடாக் பா.ஜ. எம்.பி.க்கு பேஸ்புக்கில் குவியும் பிரண்ட் ரிக்யூஸ்ட்

 

பிரதமர் மோடி பாராட்டிய லடாக் பா.ஜ. எம்.பி.க்கு பேஸ்புக்கில் குவியும் பிரண்ட் ரிக்யூஸ்ட்

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தில் உணர்ச்சிபூர்வமாக பேசி பிரதமர் மோடியின் பாராட்டிய அள்ளிய லடாக் தொகுதி எம்.பி.க்கு பேஸ்புக்கில் பிரண்ட் ரிக்யூஸ்ட் குவிந்த வண்ணம் உள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் உரிமைகளை வழங்கிய வந்த 370, 35ஏ சட்டப்பிரிவுகளை மத்திய அரசு நீக்கியது. மேலும் அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு காஷ்மீர், லடாக்) பிரிக்கப்படும் என  மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அதிரடியாக அறிவித்தது. மேலும், இது தொடர்பான ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா 2019 நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

யூனியன் பிரதேசங்கள்

நாடாளுமன்ற மக்களவையில் இந்த மசோதா தொடர்பான விவாதத்தின் போது, லடாக் நாடாளுமன்ற தொகுதி பா.ஜ. எம்.பி. ஜம்யாங்  செரிங் நம்கியால் மசோதாவை ஆதரித்து தீப்பொறி பறக்க பேசினார். கடந்த 70 ஆண்டுகளாக லடாக் மக்கள் யூனியன் பிரதேச அந்தஸ்துக்காக போராடி வருகிறார்கள்.  இன்று லடாக் முன்னேறாமல் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் சட்டப்பிரிவு 370 மற்றும் காங்கிரசும்தான் காரணம். 

மோடி, ஜம்யாங்

பஞ்சாயத்து தேர்தல்களில் அவர்கள் (மெகபூபா முப்தி மற்றும் ஓமர் அப்துல்லா) போட்டியிட மாட்டார்கள். ஆனால் பதவிக்கு வந்த பிறகு அவர்கள் போட்டியிடுவார்கள். அவர்கள் காஷ்மீரை தங்களது மூதாதையர் சொத்து என்று நினைக்கிறார்கள். ஆனால் அது நீண்ட காலம் உண்மையாக இருக்காது என சிறப்பு சட்டப்பிரிவு, காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் முன்னாள் முதல்வர்களை ஜம்யாங் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இவருடைய பேச்சு நாடாளுமன்றத்தை மட்டுமல்ல நாட்டு மக்களையும் மிகவும் கவர்ந்தது. பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் ஜம்யாங்கை பாராட்டி டிவிட் செய்து இருந்தார்.

தற்போது ஜம்யாங் செரிங் நம்கியால் நாடு முழுவதும் பிரபலமாகி விட்டார். பேஸ்புக்கில் தற்போது ஆயிரக்கணக்கான பிரண்ட் ரிக்யூஸ்ட் குவிந்து வருகிறது. ஆனால் அதிக பிரண்ட் ரிக்யூஸ்ட்டுகளை ஏற்க முடியாது என ஜம்யாங் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேஸ்புக்கில், உச்சவரம்பான 5 ஆயிரத்தை தாண்டி விட்டதால் பேஸ்புக்கில் அதிக ப்ரண்ட் ரிக்யூஸ்ட்களை ஏற்க முடியாது. அதனால் தயவு செய்து லைக் செய்து மற்றும்  இங்கே இணைக்கப்பட்டுள்ள எனது அதிகாரப்பூர்வ பக்கத்துடன் இணைந்திருங்கள் என்று பதிவு செய்து இருந்தார்.