பிரதமர் மோடி ஜனவரியில் கேரளா பயணம்; ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வாய்ப்பு

 

பிரதமர் மோடி ஜனவரியில் கேரளா பயணம்; ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வாய்ப்பு

சபரிமலை அமைந்துள்ள கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு பிரதமர் மோடி ஜனவரி மாதம் செல்லவுள்ளார்

டெல்லி: சபரிமலை அமைந்துள்ள கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு பிரதமர் மோடி ஜனவரி மாதம் செல்லவுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏற மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. நாடு முழுவதும் காவிக் கொடியை பறக்க விட கங்கணம் கட்டிக் கொண்டு பாஜக பணிப்புரிந்து வருகிறது. ஆனால், பாஜக-வை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளும் தயாராகி வருகிறது.

அதேசமயம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பாஜக-விற்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வியூகங்களை பாஜக வகுத்து வருகிறது. முதற்கட்டமாக ஒவ்வொரு மாநில பாஜக நிர்வாகிகளிடமும் வீடியோ கான்பரென்சிங் மூலமாக பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்.

மேலும், நாடு முழுவதும் 100 இடங்களில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்கவும் மோடி திட்டமிட்டுள்ளார். இதில் மூன்று கூட்டங்கள் கேரளாவில் நடைபெறுகிறது. இதன் முதல் கூட்டம் சபரிமலை அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் வருகிற ஜனவரி மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் பங்கேற்க அன்றைய தினம் கேரளா வரும் பிரதமர், சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த கூட்டத்தின் போது, சபரிமலை விவகாரம் குறித்தும் பிரதமர் மோடி உரையாற்றுவார் என தெரிகிறது.

முன்னதாக, சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்யலாம் என உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கேரளாவில் போராடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.