பிரதமர் – முதல்வர் சந்திப்பு…..பெரிதாக ரியாக்ட் செய்யாத மோடி? அப்செட்டில் ஈபிஎஸ்?

 

பிரதமர் – முதல்வர் சந்திப்பு…..பெரிதாக ரியாக்ட் செய்யாத மோடி? அப்செட்டில் ஈபிஎஸ்?

முதல்வர் கூறிய அனைத்திற்கும் பிரதமர் பெரிதாக எதுவும் ரியாக்ட் செய்யவில்லை. இதனால் ஈபிஎஸ் கடும் அப்செட்டாகி இருக்கிறார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தமிழக அரசியல் களம் நீண்ட நாட்களுக்கு பிறகு டிடிவி – ஓபிஎஸ் சந்திப்பு விவகாரத்தால் மீண்டும் சூடு பிடித்துள்ளது. டிடிவி – ஓபிஎஸ் சந்திப்பு அனைவருக்குமே அதிர்ச்சி அளித்தாலும் அவர்களின் இந்த சந்திப்பு ஈபிஎஸ் தரப்புக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளித்ததாம். இந்த விவகாரம் வெளியில் தெரியும் முன்னரே பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட முதல்வருக்கு பிரதமர் தரப்பில் எந்த ரெஸ்பான்ஸூம் வழங்கப்படாமல் இருந்தது. இந்த விவகாரம் வெளியில் தெரிந்த பிறகு இனியும் காலம் தாழ்த்தக்கூடாது என நினைத்த ஈபிஎஸ் ஆளுநர் மூலமும் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டதாக தெரிகிறது.

narendramodi

இதனையடுத்து பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கியதை தொடர்ந்து அவரை சந்திக்க நேற்று மாலை டெல்லி சென்றார் முதல்வர் பழனிசாமி. அவருடன் அமைச்சர் ஜெயக்குமாரும் சென்றிருந்தார். தொடர்ந்து அவர்கள் இன்று பிரதமரை சந்தித்து பேசினர். இந்த ஆலோசனையின்போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுவிப்பது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்கள் பேசப்பட்டாலும் மிகவும் முக்கியமாக பேசப்பட்டது டிடிவி – ஓபிஎஸ் சந்திப்பு குறித்தும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும்தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

குறிப்பாக டிடிவி – ஓபிஎஸ் சந்திப்பால் ஓபிஎஸ் மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது என்பதை பாஜக மேலிடத்திற்கு ஈபிஎஸ் உணர்த்தியதாகவும் அதன் மூலம் பாஜகவின் நிழலை முழுவதுமாக தன் பக்கம் வளைக்கும் திட்டத்தில் அவர் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் தமிழகத்தில் இழந்த செல்வாக்கை அதிமுக மீண்டும் பெற்றுவிடும் எனவே அதிமுக – பாஜக உறவு எவ்வித சிக்கலும் இல்லாமல் பயணிக்க வேண்டும் எனவும் முதல்வர் பிரதமரிடம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டாராம்.

opseps

பேரறிவாளன் உட்பட 7 பேரை உடனடியாக விடுவிப்பது, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்த ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்குவது உள்ளிட்டவைகள் மூலம் தமிழகத்தில் இழந்த செல்வாக்கை அதிமுக பெற முடியும், அதேபோல் பாஜகவும் தமிழகத்தில் ஒரு நல்ல பெயரை வாங்க முடியும். எனவே இந்த செயல்களை உடனடியாக செய்தால் இதன் பலனை நாடாளுமன்ற தேர்தலில் அறுவடை செய்து கொள்ளலாம் என பிரதமரிடம் முதல்வர் விவரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

opsmodi

அதுமட்டுமின்றி சமீபத்தில் தமிழகம் வந்த மோடியின் சகோதரர் ஈபிஎஸ் – ஓபிஎஸ்ஸை சந்தித்த கையோடு திவாகரன் மகன் ஜெயானந்த்தையும் சந்தித்து பேசினார். தமிழகத்தில் அதிமுகவால் இனி எந்த பயனும் இல்லை எனவே தினகரனையும் – திவாகரனையும் இணைத்து தென் மாவட்டங்களை முதலில் கவர் செய்யலாம் என்ற நோக்கத்தில்தான் அவர் ஜெயானந்த்தையும் சந்தித்தார் என தகவல்கள் வெளியாகின. பிரதமருடனான முதல்வரின் இந்த சந்திப்பின் போது இதுகுறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாம். 

மேலும் தென் மாவட்டங்களை பொறுத்த வரை தினகரனுக்கும் திவாகரனுக்கும் ஓரளவு செல்வாக்கு இருப்பது உண்மைதான். எனினும் அந்தளவிற்கு அவர்கள் மீது பெருமளவு அதிருப்தியும் இருக்கிறது. இதனால் அவர்களை இணைப்பதால் எந்த பயனும் இல்லை. தென் மாவட்டங்களை பொறுத்தவரையில் அதிமுகவின் பழைய செல்வாக்கை மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் முதல்வர் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. 

dhinakaran

தினகரன் செல்வாக்கை கட்டுப்படுத்த அவர் மீது இருக்கும் வழக்குகளை தூசு தட்டவும் ஓபிஎஸ்க்கு ஏதேனும் ஒரு எச்சரிக்கை விடுக்கம் விதமாக ஏதேனும் ஒன்றை செய்யும்படி முதல்வர் பிரதமரிடம் வேண்டுகோள் வைத்ததாகவும் ஆனால் அதற்கு மோடி பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை எனவும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. 

pmmodi

ஈபிஎஸ் -ஓபிஎஸ்ஸை இணைத்து அந்த ஆட்சி மூலம் ஆதாயம் அடைந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பாஜக மேலிடம் இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக தற்போதைய ஈபிஎஸ் ஆட்சியின் மீது தமிழக மக்கள் கடுமையான அதிருப்தியில் இருக்கின்றனர். கொடுத்த வாய்ப்பை ஈபிஎஸ் -ஓபிஎஸ் இருவருக்கும் பயன்படுத்தி கொள்ள தெரியவில்லை என பாஜக  மேலிடம் நினைக்கிறது. அதுமட்டுமின்றி  தம்பிதுரை உள்ளிட்ட சில எம்.பிக்களும், அமைச்சர்களும் பாஜகவிற்கு எதிராக அவ்வப்போது பேசி வந்ததால், முதல்வர் கூறிய அனைத்திற்கும் பிரதமர் பெரிதாக எதுவும் ரியாக்ட் செய்யவில்லை. இதனால் ஈபிஎஸ் கடும் அப்செட்டாகி இருக்கிறார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.