பிரதமரை மக்கள் முடிவு செய்வார்கள்: கொல்கத்தா மாநாட்டில் ஸ்டாலினுக்கு அகிலேஷ் பதிலடி

 

பிரதமரை மக்கள் முடிவு செய்வார்கள்: கொல்கத்தா மாநாட்டில் ஸ்டாலினுக்கு அகிலேஷ் பதிலடி

எங்கள் கூட்டணியில் பிரதமர் யார் என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்வர்கள் என எதிர்க்கட்சிகளின் மாநாட்டில் பேசிய உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்

கொல்கத்தா: எங்கள் கூட்டணியில் பிரதமர் யார் என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்வர்கள் என எதிர்க்கட்சிகளின் மாநாட்டில் பேசிய உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.  குறிப்பாக, மோடிக்கு எதிராக நாட்டின் முக்கிய தலைவர்களை ஓரணியில் திரட்டும் முயற்சியாக, கொல்கத்தாவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த திரிணாமூல் காங்கிரஸ் முடிவு செய்தது. அதன்படி கொல்கத்தாவில் பாஜகவுக்கு எதிராக, மம்தா பானர்ஜி தலைமையில் மாநில எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் முன்னின்று நடத்தும் இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக முதல்வர் குமாரசாமி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின், சரத்பவார், அகிலேஷ் யாதவ், ஓமர் அப்துல்லா, காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே என 22 முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தின் பேசிய அகிலேஷ் யாதவ், மத்திய பாஜக அரசு நாட்டு மக்களை ஏமாற்றிவிட்டது. மக்களிடையே பாஜக விஷத்தை தூவி வருகிறது. மோடிக்கு பதிலாக நாட்டுக்கு ஒரு புதிய பிரதமர் கிடைப்பார். எங்கள் கூட்டணியில் யார் பிரதமர் என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்வர்கள் என்றார்.

முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசிய ஸ்டாலின், பிரதமர் பதவிக்கு தாம் தமிழக மண்ணில் இருந்து ராகுல் முன்மொழிவதாகக் குறிப்பிட்டார். ஆனால், ஸ்டாலினின் கருத்துக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

அந்த வகையில், பிரதமர் பதவிக்காக ராகுல் பெயரை எவராவது எடுத்திருக்கலாம். இதற்கு அவரை எதிர்க்கட்சியினர் அனைவரும் தம் தலைவராக ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் இல்லை. பாஜக-வுக்கு எதிராக மெகா கூட்டணிக்கு முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த மெகா கூட்டணியில் உள்ள ஒருவரின் விருப்பத்தை ஏற்க வேண்டும் என்பது அவசியமில்லை’ என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.