பிரதமருக்கு எதிராக கருப்பு பலூன்; சி.ஐ.டி போலீசாரும் கண்டுபிடிக்க முடியாது-வைகோ திட்டவட்டம்

 

பிரதமருக்கு எதிராக கருப்பு பலூன்; சி.ஐ.டி போலீசாரும் கண்டுபிடிக்க முடியாது-வைகோ திட்டவட்டம்

தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு ம.தி.மு.க சார்பில் சி.ஐ.டி போலீசார்களும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கருப்பு பலூன் பறக்கவிடப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்

சென்னை: தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு ம.தி.மு.க சார்பில்  சி.ஐ.டி போலீசார்களும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கருப்பு பலூன் பறக்கவிடப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 27-ம்தேதி தமிழகம் வரவுள்ளார். பிரதமரின் இந்த பயணத்தின் போது, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டல், தனுஷ்கோடி – ராமேஸ்வரம் இடையிலான ரயில் பாதை, மதுரை – சென்னை இடையிலான அதிவே தேஜஸ் ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அவர் துவக்கி வைப்பார் என தெரிகிறது.

ஆனால், கஜா புயலால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், பலர் உயிரிழந்துள்ளனர். ஒப்புக்குக் கூட ஆறுதல் தெரிவிக்காத பிரதமர் எப்பொழுது தமிழகத்திற்கு வந்தாலும் கருப்புக் கொடி காட்டுவேன். தமிழகத்தின் அனைவரும் கருப்பு கொடி போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்திருந்தார்.

வைகோ-வின் இந்த அறிவிப்புக்கு பாஜக-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல், கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை தடுக்கும் வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.

இந்நிலையில், மதுரையில் 27ந் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்க வருகை தரும் பிரதமர் மோடிக்கு ம.தி.மு.க சார்பில்  சி.ஐ.டி போலீசார்களும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்து கருப்பு பலூன் பறக்கவிடப்படும் என ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.