பிரதமரின் வேண்டுகோளுக்கு குவியும் வரவேற்பு.. ஏர் இந்தியாவும் தடை போட்டது

 

பிரதமரின் வேண்டுகோளுக்கு குவியும் வரவேற்பு..  ஏர் இந்தியாவும் தடை போட்டது

அக்டோபர் 2ம் தேதி முதல் விமானங்களில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் கேரி பேக், கப், பிளேட் மற்றும் பார்சல் கவர்கள் போன்றவற்றால் பிளாஸ்டிக் கழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது சுற்றுப்புறச்சூழலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. இதனை கருத்தில் கொண்டு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் கேரிபேக், டீ, வாட்டர் கிளாஸ்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு பல்வேறு மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.

பிளாஸ்டிக் வேஸ்ட்

இருப்பினும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர உரையில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என மக்களுக்கு கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து இந்தியன் ரயில்வே ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை நிறுத்த முடிவு செய்தது. மேலும், அக்டோபர் 2 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அனைத்து ரயில்வே பிரிவுகளுக்கும் சுற்றறிக்கை விடுத்தது.

தற்போது ஏர் இந்தியாவும் தனது விமானங்களில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை அக்டோபர் 2ம் தேதி முதல்  நிறுத்த முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் அலையன்ஸ் விமானங்களில் தடை செயல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக ஏர் இந்தியா விமானங்களில் தடையை செயல்படுத்த உள்ளது.

மோடி

ஏர் இந்தியா விமானங்களில் பயணிகளுக்கு தற்போது வாழைக்காய் சிப்ஸ் மற்றும் சான்விட்ச் ஆகியவற்றை தற்போது பிளாஸ்டிக் கவர்களில் வைத்து கொடுக்கப்படுகிறது. அக்டோபர் 2 முதல் அவை பட்டர் பேப்பர் கவர்களில் வைத்து கொடுக்கப்படும். உணவுடன் சேர்த்து வழங்கப்படும் பிளாஸ்டிக் ஸ்பூன்களுக்கு பதிலாக லைட் சில்வர் ஸ்பூன்கள் வழங்க உள்ளது. 

இதுதவிர பிளாஸ்டிக் டம்பளர்களுக்கு பதில் காகித டம்ளர்கள், பிளாஸ்டிக் டீ கப்புகளுக்கு பதிலாக பேப்பர் கப்புகளுக்கு ஏர் இந்தியா நிறுவனம் மாற உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கேட்டரிங், எம்.எம்.டி. மற்றும் நிலையங்கள்\விமான நிலையங்களுக்கு ஏர் இந்தியா தகவல் தெரிவித்து விட்டது. ஏர் இந்தியாவை தொடர்ந்து மேலும் பல நிறுவனங்கள் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.