பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்காக ராணுவ ஹெலிகாப்டரை வரவழைத்த ஆளுநர்: நெகிழ்ச்சி சம்பவம்!

 

பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்காக ராணுவ ஹெலிகாப்டரை வரவழைத்த ஆளுநர்: நெகிழ்ச்சி சம்பவம்!

பிரசவ வலியால் துடித்த பெண்ணை ராணுவ ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வழிவகை செய்த அருணாசலப் பிரதேச ஆளுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தவாங்: பிரசவ வலியால் துடித்த பெண்ணை ராணுவ ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வழிவகை செய்த அருணாசலப் பிரதேச ஆளுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அருணாசலப் பிரதேச மாநிலத்தின் ஆளுநராக முன்னாள் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி பி.டி.மிஸ்ரா இருந்து வருகிறார். இவர் நேற்று தவாங் நகரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஹெலிகாப்டரில் வந்திருந்தார். 
ஆளுநர் பங்கேற்ற அந்த விழாவில் கலந்துகொண்ட ஒரு பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இந்த தகவல் அங்கிருந்த எம்.எல்.ஏ மூலம் ஆளுநர் பி.டி.மிஸ்ராவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அப்பெண்ணை இடாநகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என ஆளுநருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்தவுடன் உடனடியாக அப்பெண்ணையும், அவரின் கணவரையும், ஆளுநர் தான் வந்திருந்த ஹெலிகாப்டரில்   உடன் அழைத்துச் சென்றார்.

இடாநகருக்கு செல்வதற்காக ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தபோது எரிபொருள் நிரப்புவதற்காக தேஜ்பூரில் தரையிறக்கப்பட்டது. ஆனால், அப்போது திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் இயங்காமல் போனது. அதேநேரம், அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமாகியுள்ளது. 

உடனடியாக இந்திய விமானப்படையைத் தொடர்புகொண்ட ஆளுநர், விமானப்படை ஹெலிகாப்டரை தேஜ்பூருக்கு வரவழைத்து, அங்கிருந்து கர்ப்பிணிப் பெண்ணை இடா நகருக்கு அனுப்பி வைத்தார். 
அதன்பின், அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அப்பெண்ணுக்கு அழகிய குழந்தை பிறந்துள்ளது. தக்க சமயத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய ஆளுநருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.