பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை? மத்திய அமைச்சர் தீவிரம்

 

பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை? மத்திய அமைச்சர் தீவிரம்

புகார் வந்ததையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ன ஒளிபரப்பாகிறது என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சக அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் பிரபலமான ரியால்டி நிகழ்ச்சி பிக் பாஸ். நம் நாட்டில் முதலில் இந்தி சேனலில் ஒளிபரப்பானது. பின் படிப்படியாக மற்ற மொழி சேனல்களில் பிக் பாஸ் வந்து விட்டது. இந்தியில் சுமார் 12 சீசன்களை கடந்து வெற்றிகரமாக 13வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் கூட இதுவரை 3 பிக்பாஸ் சீசன்கள் முடிவடைந்து விட்டது. இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

பிக்பாஸ் 13

இந்நிலையில், உத்தர பிரதேசம் லோனி தொகுதி பா.ஜ..க. சட்டப்பேரவை உறுப்பினர் நந்த் கிஷோர் குர்ஜார், பிக் பாஸ் 13 நிகழ்ச்சி ஒளிபரப்பை உடனடியாக நிறுத்தும்படி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், பிக் பாஸ் 13 நிகழ்ச்சி ஆபாசத்தை பரப்புவதாகவும், சமூக நல்லொழுக்கத்தை பாதிப்பதாகவும் உள்ளதால் உடனடியாக அதன் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என அதில் வலியுறுத்தி இருந்தார்.

பிரகாஷ் ஜவடேகர்

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின்  கோரிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ன ஒளிபரப்பப்படுகறிது என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த வாரம் அறிக்கை கிடைத்து விடும் என தெரிவித்தார். அந்த அறிக்கையை பொறுத்து பிக் பாஸ் 13 நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது குறித்து அமைச்சகம் முடிவு எடுக்கும் என தெரிகிறது.