பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவர் யார்? இன்று மதியம் 2.30 மணிக்குள் விடை கிடைத்து விடும்…..

 

பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவர் யார்? இன்று மதியம் 2.30 மணிக்குள் விடை கிடைத்து விடும்…..

பா.ஜ.க.வின் புதிய தலைவர் யார் என்பது இன்று மதியம் 2.30 மணிக்குள் தெரிந்து விடும். ஜே.பி. நட்டா இன்று ஒரு மனதாக புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ஜ.க.வின் தலைவராக இருக்கும் அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றதையடுத்து தனது தலைவர் பதவியை வேறு நபருக்கு கொடுக்கும்படி கடந்த ஜூனில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். மேலும் கட்சி பொறுப்பில் இருப்பவர்கள் ஆட்சி  அதிகாரத்தில் இருக்கக்கூடாது என்ற பா.ஜ.க.வின் விதிமுறை காரணமாகவும் அமித் ஷா தனது தலைவர் பதவியிலிருந்து விலக முன்வந்தார்.

அமித் ஷா

ஆனால், கட்சியின் மறுசீரமைப்பு கடமைகளை நிறைவு செய்வதற்காக அவர் தொடர்ந்து தலைவர் பதவியில் இருந்தார். அதேசமயம் பா.ஜ.க.வின் தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம் செய்யப்பட்டார். அவர்தான் அடுத்த தலைவர் என அப்போதே சொல்லப்பட்டது. இந்நிலையில் அண்மையில், ஜனவரி 20ம் தேதியன்று பா.ஜ.க. புதிய தலைவருக்கான வேட்புமனுதாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஜே.பி. நட்டா

அதன்படி இன்று காலை 10  மணி முதல் 12 மணிக்குள் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் விருப்ப மனுவை தாக்கல் செய்ய வேண்டும். மதியம் 12.30 முதல் 1.30 மணி வரை வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்படும். மதியம் 1.30 முதல் 2.30 மணிக்குள் வேட்புமனுவை திரும்ப பெறுவதாக இருந்தால் பெற்றுக் கொள்ளலாம். இன்று காலை 10.30 மணி அளவில் ஜே.பி. நட்டா வேட்பு மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் நாளை புதிய தலைவருக்கான தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இருக்காது என  தெரிகிறது. ஆக, இன்று பா.ஜ.க.வின் புதிய தலைவராக ஜே.பி.நட்டா அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.