பாஸ்போர்ட்டை குதறிய நாய்க்கு மகிழ்ச்சியோடு நன்றி சொன்ன எஜமானி – என்ன காரணம்?

 

பாஸ்போர்ட்டை குதறிய நாய்க்கு மகிழ்ச்சியோடு நன்றி சொன்ன எஜமானி – என்ன காரணம்?

தன்னுடைய பாஸ்போர்ட்டை கடித்துக் குதறிய நாய்க்கு அதன் எஜமானி மிகுந்த மகிழ்ச்சியோடு நன்றி சொன்ன சம்பவம் அரங்கேறியுள்ளது.

தைபே: தன்னுடைய பாஸ்போர்ட்டை கடித்துக் குதறிய நாய்க்கு அதன் எஜமானி மிகுந்த மகிழ்ச்சியோடு நன்றி சொன்ன சம்பவம் அரங்கேறியுள்ளது.

2020-ஆம் ஆண்டின் தொடக்கமே சீனாவுக்கு பெரிய தலைவலியாக அமைந்து விட்டது. கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டில் மிக வேகமாக பரவி மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு முழு வீச்சோடு பணியாற்றி வருவதாக சீன அதிபர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொரோனா வைரஸ் ஒரு அரக்கனை போல மக்களை கொடூரமாக வேட்டையாடி வருவதாக அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் பலி எண்ணிக்கை 170-ஆக அதிகரித்துள்ளது. மேலும் சுமார் ஆயிரத்து 737 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், தன்னுடைய பாஸ்போர்ட்டை கடித்துக் குதறிய நாய்க்கு அதன் எஜமானி மிகுந்த மகிழ்ச்சியோடு நன்றி சொன்ன சம்பவம் அரங்கேறியுள்ளது. தைவான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இம்மாத தொடக்கத்தில் சீனாவின் வுஹான் நகருக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் செல்லமாக வளர்க்கும் கிமி என்றழைக்கப்படும் கோல்டன் ரெட்ரீவர் வகை நாயின் திட்டம் வேறாக இருந்தது. அந்த பெண்ணின் பாஸ்போர்ட்டை நாய் கடித்துக் குதறியது. இதை தனது பேஸ்புக்கில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி பதிவிட்ட அந்தப் பெண், “வெளியே போய் விட்டு வந்து பார்த்தபோது இந்த சம்பவம் நடந்திருந்தது!” என்று நாய் கடித்துக் குதறிய பாஸ்போர்ட் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் அந்தப் புகைப்படங்களை அந்தப் பெண் தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ஏனெனில், அவருடைய நாய் மட்டும் அந்த பாஸ்போர்ட்டை கடித்து குதறாமல் போயிருந்தால் இந்நேரம் தான் வுஹான் நகருக்கு சென்று கொரோனா வைரஸ் காய்ச்சல் பிடியில் சிக்கியிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் தன்னுடைய நாய் தன்னை காப்பாற்றி விட்டதாக அந்தப் பெண் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்தப் பதிவுக்கு பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நாயின் செயலை வெகுவாக பாராட்டியுள்ளனர்.