பால் விலை உயர்ந்ததால்….பிஸ்கட் விலையை உயர்த்தும் பிரிட்டானியா

 

பால் விலை உயர்ந்ததால்….பிஸ்கட் விலையை உயர்த்தும் பிரிட்டானியா

பால் விலை உயர்ந்ததால் பிஸ்கட் விலையை உயர்த்த போவதாக பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

நாட்டின் முன்னணி பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான விளங்கும் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அண்மையில் கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை அறிவித்தது. அதில், அந்நிறுவனத்தின் மூலப்பொருட் செலவினம் சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 7 சதவீதம அதிகரித்து ரூ.1,368 கோடியாக உயர்ந்தது. அந்த காலாண்டில் மூலப்பொருள் செலவினம் ரூ.1,271  கோடியாக உயர்ந்தது. கடந்த ஜூன் காலாண்டில் மூலப்பொருள் செலவினம் உயர்ந்ததால் அந்நிறுவனத்தின் லாப வரம்பு பாதித்தது.

பால்

இந்நிலையில் கடந்த மாதம் பால் துறையை சேர்ந்த நிறுவனங்கள் விலையை 10 சதவீதம் உயர்த்தின. இதனால் பால் விலை விறுவிறுவென ஏற்றம் கண்டது. இதனால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு உற்பத்தி செலவினம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் அந்நிறுவனம் பிஸ்கட் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.

பிரிட்டானியா பிஸ்கட்ஸ்

இது தொடர்பாக பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் வருண் பெர்ரி கூறுகையில், பால் விலை உயர்ந்து விட்டதால் பிஸ்கட் தயாரிப்புகளின் விலையை உயர்த்த வேண்டியது எங்களுக்கு அவசியம். இந்த ஆண்டு மந்தமான ஆண்டு. எனவே வாடிக்கையாளர்களை பாதிக்காத வண்ணம் பிஸ்கட் விலையை 4 முதல் 5 சதவீதம் அளவுக்குதான் உயர்த்த உள்ளோம். குறிப்பிட்ட பகுதிகளில், அனைத்து குறிப்பிட்ட பேக் அளவுகளில் விலையை உயர்த்த உள்ளோம். அடுத்த 6 முதல் 15 மாதங்களில் தேவை அதிகரிக்கும் என கணித்துள்ளோம். விலை உயர்வு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என கூறினார்.