பாலியல் தொல்லை விவகாரம்: சோனம் கபூரின் கருத்துக்கு கங்கனா பதிலடி!

 

பாலியல் தொல்லை விவகாரம்: சோனம் கபூரின் கருத்துக்கு கங்கனா பதிலடி!

இயக்குநர் விகாஸ் பால் மீது கங்கனா கூறிய பாலியல் புகாரை நம்ப முடியாது என்ற சோனம் கபூரின் கருத்துக்கு கங்கனா பதிலடி கொடுத்துள்ளார்.

மும்பை: இயக்குநர் விகாஸ் பால் மீது கங்கனா கூறிய பாலியல் புகாரை நம்ப முடியாது என்ற சோனம் கபூரின் கருத்துக்கு கங்கனா பதிலடி கொடுத்துள்ளார்.

பாலிவுட் திரையுலகில் நடிகைகள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள் குறித்த பேச்சு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் நானா பட்டேகர், ஷூட்டிங்கின் போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை தனுஸ்ரீ பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியதையடுத்து, பிரபல நடிகை கங்கனா ரனாவத்தும் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். ‘குயீன்’ பட ஷூட்டிங்கில் இயக்குநர் விகாஸ் பால் தன்னிடம் தவறாக நடந்துக் கொண்டதாக கங்கனா தெரிவித்திருந்தார். விகாஸ் பால் மீது ஏற்கனவே ஒரு பெண் பாலியல் புகார் கூறிய நிலையில், நடிகை கங்கனா ரனாவத்தும் புகார் தெரிவித்தது பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில், பெங்களூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நடிகை சோனம் கபூரிடம் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த சோனம், தனுஸ்ரீயை தான் நம்புவதாகவும். அவருக்கு ஆதரவு தெரிவித்தது எனது தோழி தான் என்றும் கூறியுள்ளார்.

sonamkangana

அதேநேரம், கங்கனாவின் பாலியல் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, கங்கனா கூறுவதை நம்ப முடியாது. அவர் நம்புவதையெல்லாம் இப்படி தான் போகிற போக்கில் பேசிவிட்டு போவார், அவை அனைத்தையும் சீரியஸாக எடுத்துக் கொள்ள முடியாது என்று சோனம் கபூர் தெரிவித்திருந்தார். அப்படி ஒரு சம்பவம் நடந்ததா என்று எனக்கு தெரியாது. ஒருவேளை நடந்து, அவர் கூறுவது உண்மையெனில் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சோனம் கபூர் கூறியிருந்தார்.

சோனம் கபூரின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள கங்கனா, சோனம் என்ன சொல்ல வருகிறார் இதன் மூலம்? எனக்கு நடந்த பாலியல் அனுபவத்தை பகிரும் போது என்னை பற்றி முடிவு செய்யும் உரிமையை சோனம் கபூருக்கு யார் கொடுத்தது? சில பெண்களை நம்பவும், சிலரை நம்பாமல் இருக்கவும் சோனம் லைசன்ஸ் வைத்திருக்கிறாரா? என் அப்பாவோட பேர், புகழ் இல்லாமல் 10 ஆண்டுகளுக்கு மேலாக போராடி இந்த இடத்தில் இருக்கிறேன். சோனம் கபூர் நல்ல நடிகையா என்று தெரியாது ஆனால் நன்றாக பேசுகிறார் என கங்கனா தெரிவித்துள்ளார்.