பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக 48 பேரை பணி நீக்கம் செய்துள்ளது கூகுள்: சுந்தர் பிச்சை

 

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக 48 பேரை பணி நீக்கம் செய்துள்ளது கூகுள்: சுந்தர் பிச்சை

பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 48 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது

சான் பிரான்சிஸ்கோ: பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 48 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய மீ டூ பிரசாரத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த மீ டூ விவகாரத்தில் ஏராளமான பிரபலங்கள் பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். சினிமா துறை மட்டும் அல்லாமல் அனைத்து துறைகளிலும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை #Metoo மூலம் பெண்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இதனிடையே, அமெரிக்க பத்திரிக்கை நிறுவனம் ஒன்று, அண்ட்ராய்ட் இயங்குதளத்தை உருவாக்கியவரான ஆண்டி ரூபினுக்கு, கடந்த 2014-ஆம் ஆண்டில் 90 மில்லயன் டாலர்களை செட்டில் மெண்ட் தொகையாக கொடுத்து பாராட்டி வெளியே அனுப்பிய கூகுள் நிறுவனம், அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறைத்து விட்டதாக செய்தி வெளியிட்டது.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில், பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த 2 ஆண்டில் மட்டும் 13 சீனியர் ஊழியர்கள் உட்பட 48 பேர்  கூகுள் நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் யாருக்கும் செட்டில் மெண்ட் தொகை எதுவும் கொடுக்கப்படவில்லை. பாலியல் தொல்லைக்கு எதிராக பாதுகாப்பை அதிகரிக்க பல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.