பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சாமியார் சதுர்வேதி தலைமறைவு: தேடுதல் வேட்டையில் தனிப்படை!

 

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சாமியார் சதுர்வேதி தலைமறைவு: தேடுதல் வேட்டையில் தனிப்படை!

பாலியல் அத்துமீறல் வழக்கில் சிக்கி தலைமறைவாகி இருக்கும் சாமியார் சதுர்வேதியை பிடிக்க தனிப்படை போலீசார் வாரணாசி விரைந்துள்ளனர்.

சென்னை: பாலியல் அத்துமீறல் வழக்கில் சிக்கி தலைமறைவாகி இருக்கும் சாமியார் சதுர்வேதியை பிடிக்க தனிப்படை போலீசார் வாரணாசி விரைந்துள்ளனர்.

சென்னை தியாகராய நகர் பசுல்லா சாலையில், பிரசன்ன வெங்கடாச்சாரியார் சதுர்வேதி என்ற சாமியார், 2002ஆம் ஆண்டு முதல் ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் டிரஸ்ட் என்ற பெயரில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வந்தார்.

இவரை ஆன்மிக குருவாக நம்பி, ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சுரேஷ் என்பவர் குடும்பத்துடன் அவரது பக்தராகிவிட்டார். அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட சாமியார் பிரசன்ன வெங்கடாச்சாரியார் சதுர்வேதி, சுரேஷின் ஆழ்வார்பேட்டை வீட்டில் உள்ள கீழ்தளத்திற்கு தன் ஆசிரமத்தை மாற்றியுள்ளார்.

அதோடு நின்று விடாமல், சுரேஷின் குடும்பத்தை மயக்கி 15 லட்ச ரூபாயை கறந்த சாமியார், ஒரு கட்டத்தில் சுரேஷின் மனைவிக்கும், அவரது 16 வயது மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். எதிர்த்துக்கேட்டபோது, தனது கூட்டாளிகள் ஸ்ரீபதி, ஸ்ரீதர், கல்கி மனோகரன், பாலமுருகன், தாமோதரன், அனந்தகுமார் ஆகியோருடன் சேர்ந்து அடித்து, உதைத்து சுரேஷ் குடும்பத்தை துன்புறுத்தியுள்ளார். 

அதிலிருந்து தப்பிய சுரேஷ், கடந்த 2004-ஆம் ஆண்டு  சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசாரிடம் சாமியார் குறித்து புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், போலி சாமியார் பிரசன்ன வெங்கடாச்சாரியார் சதுர்வேதியையும், அவரது கூட்டாளிகள் 6 பேரையும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

அதன்பின், நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற சாமியார் சதுர்வேதி,  2016ஆம் ஆண்டுக்குப் பிறகு வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்நிலையில், தலைமறைவாக இருக்கும் போலி சாமியார் சதுர்வேதி, வாரணாசியிலும், நேபாளத்திலும் இருப்பதாக தகவல் கிடைத்து வந்த நிலையில், அவரை கைது செய்ய மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். இந்த தனிப்படை, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் முகாமிட்டு, சாமியார் பிரசன்ன வெங்கடாச்சாரியார் சதுர்வேதியை கைது செய்ய தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.