பாலம் கட்டுவதற்காக மசூதியை இடிக்க ஒப்புக்கொண்ட மக்கள்! காஷ்மீரில் வேகமெடுக்கும் வளர்ச்சி பணிகள்…

 

பாலம் கட்டுவதற்காக மசூதியை இடிக்க ஒப்புக்கொண்ட மக்கள்! காஷ்மீரில் வேகமெடுக்கும் வளர்ச்சி பணிகள்…

காஷ்மீரில் ஜீலம் நதி மேல் பாலம் அமைப்பதற்காக, 40 ஆண்டுகால மசூதியை இடிக்க அந்த பகுதி மக்கள் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து 17 ஆண்டுகளுக்கு பிறகு அந்த பாலம் கட்டுவதற்கான பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது.

காஷ்மீரில் பீர் பஞ்சல் தொடரில் ஜீலம் நதி உற்பத்தியாகி ஸ்ரீநகர் மற்றும் வுலர் ஏரி வழியாக பாய்ந்து கடைசியில் பாகிஸ்தானை அடைகிறது. ஸ்ரீநகரில் கமர்வாரி மற்றும் நூா்பாக் பகுதிகளுக்கு இடையே ஜீலம் ஆறு செல்கிறது. இந்த இரண்டு பகுதிகளையும் இணைக்க ஜீலம் நதி மேலே பாலம் கட்ட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

ஷாஹித் இக்பால் சவுத்ரி

இதனையடுத்து கடந்த 2002ம் ஆண்டில் பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது. ஆனால் தொடங்கிய வேகத்திலேயே பாலம் அமைப்பதற்கான பணிகள் முடங்கியது. ஏனென்றால் பாலம் அமைப்பதற்காக அந்த பகுதியில் இருந்த மசூதி மற்றும் குடியிருப்புகள் மற்றும் வர்த்தக கட்டிடங்களை இடிக்க வேண்டியது இருந்தது. ஆனால் அவற்றை இடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பாலம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. 

மசூதி

இந்நிலையில் புதிதாக உதயமாகி உள்ள ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு  வளர்ச்சி பணிகளில் தீவிரம் கவனம் செலுத்து வருகிறது. இதன் எதிரொலியாக அந்த பாலம் கட்டுவது தொடர்பாக, மசூதியின் செயல் குழு உறுப்பினர்கள், கமர்வாரி குடியிருப்புவாசிகளுடன் தொடர்ந்து பலமுறை ஸ்ரீநகர் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் ஷாஹித் இக்பால் சவுத்ரி பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பலனாக 40 ஆண்டு கால மசூதியை இடிக்க நிர்வாகத்தினர் ஒப்புக்கொண்டனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களை இடிக்கவும் அந்த பகுதி மக்கள் சம்மதம் தெரிவித்தனர். அதேசமயம் இடிக்கப்படும் மசூதிக்கு மாற்றாக வேறு இடத்தில் 12 மாதங்களில் புதிய மசூதியை மாவட்ட நிர்வாகம் கட்டி கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.