பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் தீ மிதித்தல் விழா

 

பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் தீ மிதித்தல் விழா

கோபி அருகே உள்ள பிரசித்திபெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து வழிபட்டனர்.

ஈரோடு : 

கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்ற கோயில் ஆகும். மிகப்பழமையான இந்த கோயிலில் ஆண்டு தோறும் குண்டம் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் விழா நேற்று நடைபெற்றது.

pariur

விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை குண்டத்துக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய விறகுகள் கோயிலின் முன்பு உள்ள குண்டம் அமைக்கும் இடத்தில் குவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து குண்டத்துக்கு பொங்கல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது இரவு 11 மணிக்கு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. விறகுகள் கொழுந்து விட்டு எரிந்து கனலாக மாறியது. 

அதே நேரத்தில் அதிகாலை 2 மணிக்கு கோயிலில் இருந்து தலைமை பூசாரி கந்தவேல் தலைமையில் பூசாரிகள் கோயிலின் முக்கிய நிர்வாகிகள் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தொட்டியபாளையம் பிரிவில் உள்ள கோயிலுக்கு சென்றனர்.

pariur

அதைத்தொடர்ந்து படைக்கலம் மற்றும் குதிரையுடன் மேள தாளங்கள் முழங்க ஊர்வலம் நடைபெற்றது . அதன் பின்னர் 40 அடி நீளமும்  3 அடி அகலத்தில் தீ குண்டம் தயாரானது.

இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 7 மணியளவில் தலைமை பூசாரி கந்தவேல் குண்டத்தில் இறங்கி தீமிதித்து கோயிலுக்குள் சென்றார். அவரைத்தொடர்ந்து மற்ற பூசாரிகள், கோவில் பணியாளர்கள், குண்டம் வீரர்கள் மற்றும் பக்தர்கள் குண்டம் இறங்கினார்கள்.

pariur

குண்டம் இறங்குவதற்காக திருப்பூர், கோவை, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் பக்தர்கள் வந்து குவிந்தனர். மதியம் 1.15 மணிவரை பக்தர்கள் வரிசையாக வந்து குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் குண்டம் இறங்கியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.