பாரத் மாதா கி ஜே சொல்லாதவர்களின் வாக்குக்கு மதிப்பு இல்லை- சர்ச்சையை ஏற்படுத்திய பா.ஜ.க. வேட்பாளர்

 

பாரத் மாதா கி ஜே சொல்லாதவர்களின் வாக்குக்கு மதிப்பு இல்லை- சர்ச்சையை ஏற்படுத்திய பா.ஜ.க. வேட்பாளர்

அரியானாவில் பா.ஜ.க. வேட்பாளர் ஒருவர், பாரத் மாதா கி ஜே என சொல்லாதவர்களின் வாக்குக்கு மதிப்பு இல்லை என மக்கள் மத்தியில் பேசும் சர்ச்சையை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அரியானாவில் வரும் 21ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தின் அடம்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் பஜன் லாலின் மகன் குல்தீப் பிஷ்னாயின் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் டிக் டாக் புகழ் சோனாலி போகத் களத்தில் உள்ளார். தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் சோனாலி சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

டிக் டாக் புகழ் சோனாலி போகத்

பாலசமண்ட் கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சோனாலி போகத், மக்கள் மத்தியில் பேசும் காட்சிதான் அந்த வீடியோவில் உள்ளது. அந்த வீடியோவில், சோனாலி போகத் தனது உரையின் போது அடிக்கடி மக்களை பார்த்து பாரத் மாதா கி ஜே என சொல்லும்படி கூறுகிறார். அதனையடுத்து மக்களும் பாரத் மாதா கி ஜே என கூறுகின்றனர். அதேசமயம், சிலர்  அதனை சொல்லாமல் இருப்பதை பார்த்து அவர்களை கடுமையாக தாக்கி பேசுவது தெளிவாக கேட்கிறது. 

சோனாலி போகத்

பாரத் மாதா கி ஜே என சொல்லாதவர்களை பார்த்து நீங்கள் எல்லாம் பாகிஸ்தானில் இருந்து வந்தீர்களா? நீங்கள் எல்லாம் இந்தியர்கள் என்றால் பாரத் மாதா கி ஜே என சொல்லுங்கள் என சொல்கிறார். அப்போதும் சிலர் சொல்லாமல் இருந்தனர். உடனே சோனாலி போகத், உங்கள் அனைவருக்காகவும் நான் வெட்கப்படுகிறேன். அற்பமான அரசியலுக்காக தேசத்துக்காக ஜே என சொல்ல முடியாத உங்களை போன்ற இருக்கிறார்கள் என்பதற்காக.  பாரத் மாதா கி ஜே என சொல்ல முடியாதவர்களின் வாக்குக்கு மதிப்பு கிடையாது என அவர் கூறுவது அந்த வீடியோவில் தெளிவாக கேட்கிறது. தற்போது இந்த சர்ச்சைக்குரிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.