பாரத் பந்த்: இரண்டாவாது நாளாக தொடரும் தொழிற்சங்கங்களின் போராட்டம்

 

பாரத் பந்த்: இரண்டாவாது நாளாக தொடரும் தொழிற்சங்கங்களின் போராட்டம்

தொழிற்சங்கங்களின் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது

சென்னை: தொழிற்சங்கங்களின் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும் எனபன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு 10 தொழிற்சங்கங்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி, நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், போக்குவரத்து துறையினர், மருத்துவம், தொலைத் தொடர்பு துறையினர், நிலக்கரி, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து துறையினரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து கழகங்கள், ஆட்டோ, டாக்சி ஓட்டுனர் சங்கங்கள், வங்கி ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள், தொலைத் தொடர்புத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வட மாநிலங்களில் கடும் பாதிப்புக்கு உள்ளானது.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, திருவனந்தபுரம், பெங்களூர்  உள்ளிட்ட பெரிய நகரங்களில் பாதிப்பு கூடுதலாக இருந்தது. மேற்குவங்கத்தில் சில இடங்களில் கல்வீச்சு போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்றன. கேரளாவில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இரண்டுநாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுதிருந்ததால், போராட்டத்தின் பாதிப்பு குறைவாகவே உள்ளது. பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்டவைகள் வழக்கம் போல் இயங்குகின்றன. பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை.