பாமக இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா கட்சியிலிருந்து விலகல்! கட்சி தொண்டர்களுக்குள் குழப்பம்!?

 

பாமக இளைஞரணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா கட்சியிலிருந்து விலகல்! கட்சி தொண்டர்களுக்குள் குழப்பம்!?

மக்களவைத் தேர்தலுக்கு பாமக அமைத்துள்ள கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் பலர் பதவி விலகி வருவதால், அன்புமணி ராமதாஸ் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்

சென்னை: மக்களவைத் தேர்தலுக்கு பாமக அமைத்துள்ள கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் பலர் பதவி விலகி வருவதால், அன்புமணி ராமதாஸ் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் அதிமுக-பாமக-பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த கூட்டணியில், பாமக-வுக்கு 7 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களவை பதவியும் செளம்யா அன்புமணிக்குத்தான் என்று, பா.ம.க தொண்டர்கள் இப்போதே பேசத் தொடங்கி விட்டார்கள்.

பாமக கடந்த தேர்தலை விட இப்போது பலம் வாய்ந்ததாக மாறியிருப்பதாக கருதப்படுவதால் பாமக, அதிமுக அணியில் இணைந்திருப்பது மற்ற கட்சிகளை அதிர வைத்துள்ளது.இதனால் மற்ற கட்சியினர் பாமகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

இந்த நிலையில் தற்போது பா.ம.க கட்சிக்கு உள்ளிருந்தே பலத்த எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கி உள்ளன.இதனைத் தொடர்ந்து பா.ம.க மாநில இளைஞர் அணி செயலாளர் ராஜேஸ்வரி பிரியா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் பா.ம.க  மாநில இளைஞர் சங்க செயலாளராக கடந்த 2017-ஆம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி முதல் பதவி வகித்து வருகிறேன். பா.ம.க அமைத்துள்ள கூட்டணி குறித்து மனம் ஒவ்வாமல் அதிலிருந்து விலகுகிறேன். எனது விலகல் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கவுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

1996 தேர்தலில் மக்களின் வெறுப்புக்கு ஆளாகி இருந்த ஜெயாவின்  அ.தி.மு.கவிடம் நரசிம்மராவ் கூட்டணி அமைக்கச் சொன்னதும், தமிழ்நாடு காங்கிரஸ் உடைந்தது போல அ.தி.மு.கவின் அதிருப்தியாளர்கள் டி.டி .வி தினகரனின்  அ.ம.மு.கவுக்கு போவார்கள் என்று அரசியல் நோக்கர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே… பாமகவில் பிளவு ஏற்பட ஆரம்பித்திருப்பது அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது!