பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜ. தலைவர் கல்யாண் சிங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு

 

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜ. தலைவர் கல்யாண் சிங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்ற வழக்கில் முன்னாள் கவர்னரும், பா.ஜ.வின் முன்னாள் முதல்வருமான கல்யாண் சிங்கை வரும் 27ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் 1992 டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அப்போது அந்த மாநிலத்தின் முதல் அமைச்சராக இருந்தவர் பா.ஜ.வின் கல்யாண் சிங். பாபர் மசூதி இடிப்பு வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. பாபர் மசூதி தொடர்பான குற்ற வழக்கில் கல்யாண் சிங், எல்.கே. அத்வானி, உமா பாரதி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு

இந்நிலையில், 2014ல் மத்தியில் பா.ஜ. ஆட்சிக்கு வந்தவுடன் உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் ராஜஸ்தான் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டார். தனது பதவி காலம் முடிவடைந்தவுடன் கடந்த 9ம் தேதி கல்யாண் சிங் மீண்டும் பா.ஜ.வில் இணைந்தார். இதனையடுத்து அவர் மீதான குற்றவழக்கை சி.பி.ஐ. வேகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் லக்னோவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் முன்னாள் கவர்னர் கல்யாண் சிங்கை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அனுமதி வேண்டி சி.பி.ஐ. அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து, கல்யாண் சிங் அரசு பதவியில் இல்லை என என அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

சி.பி.ஐ.

இதனையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்துக்கு புதிய கவர்னர் நியமிக்கப்பட்டுள்ளார் மற்றும் கல்யாண் சிங் தனது கடமைகளிலிருந்து விடுவிக்கப்பட்டார் என சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. நேற்று தெரிவித்தது. இதனையடுத்து வரும் 27ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக கல்யாண சிங்குக்கு சம்மன் அனுப்பும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.