பான், நிலம் மற்றும் வங்கி ஆவணங்கள் ஒருவரின் குடியுரிமையை நிரூபணம் செய்யாது….. கவுகாத்தி உயர் நீதிமன்றம்

 

பான், நிலம் மற்றும் வங்கி ஆவணங்கள் ஒருவரின் குடியுரிமையை நிரூபணம் செய்யாது….. கவுகாத்தி உயர் நீதிமன்றம்

ஜபேதா பேகம் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், பான், நிலம் மற்றும் வங்கி ஆவணங்கள் ஒருவரின் குடியுரிமையை நிரூபணம் செய்யாது என கவுகாத்தி உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அசாம் மாநிலம் பக்ஸா மாவட்டத்தில் உள்ள தீர்ப்பாயம், போலீஸ் சூப்பிரண்டு (எல்லை) அளித்த குறிப்பின் அடிப்படையில் ஜபேதா பேகம் என்பவருக்கு அவரது இந்திய குடியுரிமையை நிரூபிக்கக்கோரி நோட்டீஸ் அனுப்பியது. இதனையடுத்து ஜபேதா பேகம்  தீர்ப்பாயத்தில் ஆஜராகி எழுத்துப்பூர்வமான அறிக்கையுடன், தான் பிறப்பு அடிப்படையில் இந்தியர் என்பதற்கு ஆதாரமாக பான் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் 2 வங்கி பாஸ்புக் உள்பட 14 ஆவணங்களை தாக்கல் செய்தார்.

வங்கி பாஸ்புக் (மாதிரி)

அவற்றை ஆய்வு செய்த தீர்ப்பாயம், ஒரு நபரின் குடியுரிமையை ஆதரிக்கும் சான்றிதழ்களை வழங்க கிராம தலைவர்களுக்கு உரிமை இல்லை என்று கூறியதுடன், வங்கி ஆவணங்களையும் நிராகரித்தது, ஏனெனில் அவை அந்த பெண்ணுடையது என நிரூபிக்கப்படவில்லை. தனது பெற்றோர் என குறிப்பிடும் நபர்களுடன் இணைக்கும் ஆவணங்களை மனுதாரர் தாக்கல் செய்ய தவறிவிட்டார் என தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.

கவுகாத்தி உயர் நீதிமன்றம்

தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஜபேதா பேகம் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பான் கார்டு, நிலம் மற்றும் வங்கி ஆவணங்கள் ஒருவரின் குடியுரிமையை நிரூபணம் செய்யாது என்பதை உறுதி செய்தது. மேலும் தன் முன் வைக்கப்பட்ட ஆதாரங்களை தீர்ப்பாயம் சரியாக மதிப்பீடு செய்துள்ளது என்றும், தீர்ப்பாயத்தின் முடிவில் எந்தவிதமான விவரீதமும் இல்லை என கூறி ஜபேடா பேகத்தின் மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.