பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி இவர் தான்-வீடியோ

 

பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி இவர் தான்-வீடியோ

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் அடையாளம் தெரியவந்துள்ளது

புதுதில்லி: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் அடையாளம் தெரியவந்துள்ளது.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு திரும்பிக்கொண்டிருந்த 78 வாகனங்களில் மொத்தம் 2,500 மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை வீரர்கள் பயணித்தனர். புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா பகுதியில், பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது குறி வைத்து தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 44 பாதுகாப்புப் படை வீரர்களின் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். உலக நாடுகளைச்சேரந்த தலைவர்கள் பலர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. சுமார் 100 கிலோ வெடிமருந்துடன் பாதுகாப்பு படையினரின் மீது தீவிரவாதி மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதியின் அடையாளம் தெரியவந்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் கண்டிபா பகுதியைச் சேர்ந்த ‘ஆதில் அகமது தர்’ தான் அந்த நபர் எனவும், கண்டிபா தாக்குதல் நடந்த பகுதியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர்  தொலைவில் தான் உள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

ஆதிலின் தந்தையின் பெயர் ரியாஸ் அகமது. அவர் அங்கு சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஆதில் இடையில் படிப்பை நிறுத்திவிட்டு அருகிலிருந்த மில் ஒன்றில் வேலைபார்த்து வந்துள்ளார். உறவினர் ஒருவர் மூலம் ஆதிலுக்கு பயங்கரவாத அமைப்பு மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மூலம் மூளைச் சலவை செயப்பட்டு, கடந்த ஆண்டு தான் ஜெய்ஷ் அமைப்பில் இணைந்துள்ளார்.

ஆதிலை தற்கொலைப்படை தாக்குதலுக்கு தயார் படுத்திய தீவிரவாத அமைப்பு, அவரை இந்த தாக்குதலுக்கு  பயன்படுத்திக் கொண்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், ஆதில் ஆயுதங்களுடன் நின்றுகொண்டிருக்கிறார். நான் எதற்காக சேர்ந்தேனோ அதற்கான சரியான நேரத்தை எதிர்நோக்கி காத்திருந்தேன். இந்த வீடியோ உங்களை வந்தடையும் முன் நான் சொர்கத்தில் இருப்பேன். காஷ்மீர் மக்களுக்கு என்னுடைய கடைசி செய்தி என்று பேசியுள்ளார்.