பாதுகாப்பு உபகரணங்களை ஃப்ரீயாக கொடுத்த இத்தாலி… அதையே காசுக்கு விற்க கரார் காட்டும் சீனா!

 

பாதுகாப்பு உபகரணங்களை ஃப்ரீயாக கொடுத்த இத்தாலி… அதையே காசுக்கு விற்க கரார் காட்டும் சீனா!

சீனாவுக்கு இத்தாலி ஃப்ரீயாக கொடுத்த பாதுகாப்பு கவசங்களை தற்போது சீனா விலைக்கு விற்க முயன்று வருவதாக அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளியாகி உள்ளன.

சீனாவில் கொரோனா தீவிரமாக இருந்தபோது உலக நாடுகள் அதற்கு உதவின. அந்த வகையில் இத்தாலி பாதுகாப்பு உபகரணங்களை அதிக அளவில் சீனாவுக்கு வழங்கி உதவியது. கொரோனா தொற்று மற்றவர்களுக்கு பரவுவதைத் தடுக்க, மருத்துவ பணியாளர்களுக்குத் தேவையான அதிக பாதுகாப்பு கவசங்களை இத்தாலி இலவசமாக சீனாவுக்கு வழங்கியுள்ளது. 

தற்போது நிலைமை மாறிவிட்டது, சீனாவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால், உலக அளவில் இத்தாலியில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். மக்களுக்கு சிகிச்சை அளிக்க, மருத்துவ பணியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு கருவிகள் இல்லாமல் இத்தாலி திண்டாடி வருகிறது. இந்த நிலையில் இத்தாலிக்கு சீனா மருத்துவ உதவிகள் வழங்குவதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இந்த தகவலை அமெரிக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர். இது தொடர்பாக ஆங்கில இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அமெரிக்காவின் உயர் அதிகாரி ஒருவர், “பிபிஇ எனப்படும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை இத்தாலி விலைக்கு வாங்க வேண்டும் என்று சீனா நிர்ப்பந்தித்துள்ளது. இவை அனைத்தும் சீனாவுக்கு கொரோனா தொடக்க காலத்தில் இலவசமாக கிடைக்கப்பட்டவை. ஐரோப்பாவில் கொரோனா பரவுவதற்கு முன்பாக இந்த பாதுகாப்பு உபகரணங்களை இத்தாலி இலவசமாக சீனாவுக்கு வழங்கியது” என்றார்.

இதே போல் ஸ்பெயின் கூட சீனா தொடர்பாக புகார் கூறியுள்ளது. சீனா விற்பனை செய்த 50.000 விரைவு பரிசோதனை கிட் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக அது கூறியுள்ளது. தி நெதர்லாந்து நாடு வாங்கிய பாதுகாப்பு முக கவசங்களில் பாதி மருத்துவர்கள் நிர்ணயித்த தரத்தின் அடிப்படையில் இல்லை என்று கூறப்படுகிறது.