பாட்டே என்னுடையது; எனக்கு பங்கு இல்லையா?: ராயல்டி கோரும் இசைஞானி இளையராஜா!

 

பாட்டே என்னுடையது; எனக்கு பங்கு இல்லையா?: ராயல்டி கோரும் இசைஞானி இளையராஜா!

என்னுடைய அனுமதியை பெற்று தான் எனது பாடல்களை பாட வேண்டும் எனக் கூறி இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை: என்னுடைய அனுமதியை பெற்று தான் எனது பாடல்களை பாட வேண்டும் எனக் கூறி இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இசையுலகின் ஜாம்பவனாக திகழும் இசைஞானி இளையராஜா, தனது பாடல்களுக்கு ராயல்டி கோரி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், என்னுடைய பாடல்களை என் முன் அனுமதியில்லாமல் பாட விரும்பும் இசைக்கலைஞர்கள் என்னிடம் முன் அனுமதி பெற்று அதற்குரிய விஷயங்களை முறைப்படி செய்துவிட்டு, அதன்பின் பாடவேண்டும். இல்லையென்றால் அது சட்டப்படி குற்றமாகும்.

அப்படி செய்வது தவறு என்பதை நீங்கள் உணரவேண்டும். இதை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இதுவரை .பி.ஆர்.எஸ்ல் மெம்பராக இருந்தேன். தற்போது ஐ.பி.ஆர்.எஸ். இல் உறுப்பினராக இல்லாததால், இதுவரை என் சார்பாக வசூலிக்கப்பட்டு வந்த ராயல்டி தொகையை இனி நமது தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் வசூலிக்கும். அவர்களுக்கு நான் அந்த உரிமையை வழங்கியிருக்கிறேன்.

இதில் பாடகர்களும், பாடகிகளும், பேண்ட் கலைஞர்களும் அடங்குவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். எல்லோரும் இந்த விஷயத்தைச் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் பாடுவதற்கு நான் இடையூறு  செய்யவில்லை. நீங்கள் வாங்குகின்ற பணத்துக்குத்தான் ராயல்டி தொகையே தவிர நீங்கள் பாடுகின்ற பாடலுக்கு ராயல்டி தொகை இல்லை.

நீங்கள் இலவசமாகப் பாடினால், இலவசமாகப் பாடிவிடலாம். அதற்கு பணம்கொடுக்க தேவையில்லை. இதைச் சரியாக புரிந்துகொள்ளுங்கள். சும்மாவா கச்சேரி செய்கிறீர்கள்? பணம் வாங்குகின்றீர்கள் அல்லவா? பாட்டே என்னுடையது என்றபோது பங்கு எப்படி எனக்கு இல்லாமல் போகும்

பங்கு என்பது ஒரு சின்ன தொகை. ஒரு பேருக்குத்தான் அதை கேக்கறது. சட்டப்படி இருக்க வேண்டும் என்பதற்காக. இது வளர்ந்து வரும் தலைமுறைக்கு பெரிய நடவடிக்கையாக இருக்கும்; முன்னோட்டமாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்’ என்று இளையராஜா வீடியோவில் தெரிவித்துள்ளார்.