பாடகி சின்மயி-யின் பாலியல் குற்றச்சாட்டுக்கு கவிஞர் வைரமுத்து விளக்கம்!

 

பாடகி சின்மயி-யின் பாலியல் குற்றச்சாட்டுக்கு கவிஞர் வைரமுத்து விளக்கம்!

பிரபல பின்னணி பாடகி சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்கு கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார்.

சென்னை: பிரபல பின்னணி பாடகி சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்கு கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார்.

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை திரையுலகில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இந்நிலையில், பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து திரையுலக பெண்கள் பேசத் தொடங்கியதையடுத்து, இதில் ஏராளமான புகழ்மிக்க பிரபலங்கள் சிக்கியிருப்பது அம்பலமாகி வருகிறது. பாலிவுட்டில் நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர் நானா பட்டேகர் மீது 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த பாலியல் தொல்லை பற்றி புகார் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பாலிவுட்டில் இந்த மீ டூ பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது.

vairamuthu

இந்நிலையில், தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக முத்திரை பதித்த சின்மயி, 7 முறை தேசிய விருதுபெற்ற, செல்வாக்கு மிகுந்த மூத்த திரை பிரபலமான கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். சின்மயிக்கு ஆதரவாக பல நடிகர், நடிகைகள் குரல் கொடுத்து வந்தனர்.

வைரமுத்துவால் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார். இந்த விவகாரம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கவிஞர் வைரமுத்து தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்துள்ளார்.

அவரது ட்வீட்டில், ‘அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இவ்விவகாரத்தில், கவிஞர் வைரமுத்து தனது தரப்பி விளக்கத்தை தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்துவின் இந்த விளக்கத்தை உதாசினப்படுத்தும் விதமாக, வைரமுத்துவை பொய் கூறுபவர் என்று சின்மயி பதில் ட்வீட் போட்டுள்ளார்.