பாஜக-வால் முடியும்னா எங்களாலும் முடியும்: ராகுல் ஆவேசம்

 

பாஜக-வால் முடியும்னா எங்களாலும் முடியும்: ராகுல் ஆவேசம்

பாஜகவால் தொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்ய முடியும் எனில் காங்கிரஸ் கட்சியால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத்தை அளிக்க முடியும் என அக்கட்சியின் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்

புவனேஸ்வர்: பாஜகவால் தொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்ய முடியும் எனில் காங்கிரஸ் கட்சியால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத்தை அளிக்க முடியும் என அக்கட்சியின் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டில் சிறு குறு விவசாயிகளுக்கு ஒரு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அப்படி பார்த்தால் நாள் ஒன்றுக்கு ரூ.17 ஆகும். இந்த அறிவிப்புக்கு ஒருசாரார் வரவேற்பு தெரிவித்தாலும், பலர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். தேனீர் அருந்த கூட இந்த தொகை போதாது என தமிழக விவசாய சங்கத்தினர் அதிருப்தி தெரிவித்தனர்.

இதனிடையே, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான உத்தரவாதம் அளிக்கும் திட்டம் செயல்படுதப்படும் என அக்கட்சியின் தலைவர் ராகுல் அறிவித்தார். ஆனால், இது தேர்தலுக்காக முன்வைக்கப்படும் காங்கிரஸின் பிரசார யுக்தி என சிலர் விமர்சித்தனர்.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் மக்கள் பலனடைந்தனர். ஆனால் அதைக் காட்டிலும் பெரிய நன்மை  குறைந்தபட்ச வருமான உத்தரவாதத்தின் மூலம் கிடைக்கும். 5 முதல் 6 மாதங்களுக்கு அனைத்து ஏழைகளுக்கும் இந்த வருமானம் கிடைக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு வருகிறது.

பிரதமர் மோடி, ஒரு விவசாயி குடும்பத்துக்கு ரூ.17 கொடுப்பதாக அறிவித்திருக்கிறார். ஆனால் காங்கிரஸ் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழைக்கும் குறைந்தபட்ச வருமானத்தை அளிக்கும். இப்பணம் தனிப்பட்ட நபரின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகச் செலுத்தப்படும். பாஜக-வால் 15 தொழிலதிபர்களின் ரூ.3,50,000 கோடி கடனை தள்ளுபடி செய்ய முடியும் எனில், காங்கிரசால் ஒவ்வொரு ஏழையின் வங்கிக் கணக்குக்கும் குறைந்தபட்ச வருமானத்தை அளிக்க முடியும் என்றார்.