பாஜக மிரட்டலுக்கு மொத்தமாக சரண்டரான மு.க.ஸ்டாலின்… பதற வைக்கும் பகீர் பின்னணி..!

 

பாஜக மிரட்டலுக்கு  மொத்தமாக சரண்டரான மு.க.ஸ்டாலின்… பதற வைக்கும் பகீர் பின்னணி..!

மத்திய பாஜக அரசு விடுத்த ரெய்டு மற்றும் வழக்கு எச்சரிக்கையே, அதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

இந்தி மொழி இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று, முதன்முதலில் திமுக அறிவிப்பு வெளியிட்டது.

amit shah

நாட்டின் மற்ற மாநிலங்களிலும் அவரது கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது, பாஜகவின் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் தமது எதிப்பை பதிவு செய்தார். இதையடுத்து, அமித்ஷா, ஒவ்வொரு மாநிலத்திலும், தாய்மொழியை அடுத்து இந்தியை கற்க வேண்டும் என்று கூறினேனே தவிர, இந்தியை திணிக்க வில்லை என்று விளக்கம் அளித்திருந்தார்.

ஆனால், நேற்று முன்தினம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசிய பின்னர், அமித்ஷவின் விளக்கத்தை அடுத்து, இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

stalin

திமுகவின் உயர்நிலை செயல் திட்ட குழுவில், எடுக்கப்பட்ட இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்ட முடிவை, குழுவில் உள்ளவர்களிடம் கலந்துகூட பேசாமல், உடனடியாக ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிட வேண்டிய நிர்பந்தம் ஸ்டாலினுக்கு ஏற்பட்டது ஏன்? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

அமித்ஷாவின் இந்தி எதிர்ப்பு கருத்துக்கு, முதன் முதலில் எதிர்ப்பை திமுகதான் வெளியிட்டது. அதன் பின்னரே, மற்ற மாநிலங்களில் அந்த எதிர்ப்பு பற்றிக்கொண்டது. திமுகவின், இந்த அச்சுறுத்தலே, அமித்ஷாவின் இந்தி பற்றிய கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு நெருக்கடி கொடுத்தது என்று, திமுகவினர் கூறுகின்றனர்.

ஆனால், தமது கருத்துக்கு எதிராக திமுக நிச்சயம் எதிர்வினை ஆற்றும் என்று அமித்ஷாவுக்கு தெரியும். ஆனால், மற்ற மாநிலங்களிலும், குறிப்பாக கர்நாடகாவிலும் கூட எதிர்ப்பு வலுக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால்தான், அவர் தமது கருத்து தவறாக திரித்து கூறப்பட்டதாக விளக்கம் அளித்தார். அதே சமயம், தமிழகத்தில் வலுவாக இருக்கும் திமுகவை அச்சுறுத்தவும் இது ஒரு வாய்ப்பாக அவருக்கு அமைந்தது என்றும் பாஜக தரப்பினர் கூறுகின்றனர்.

அண்மையில் நாடாளுமன்ற தேர்தலுடன் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில், எடப்பாடி ஆட்சி அகற்றப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். பின்னர், அதற்கான முயற்சிகள் அனைத்தும் கைவிடப்பட்டது. மத்திய பாஜக அரசு விடுத்த ரெய்டு மற்றும் வழக்கு எச்சரிக்கையே, அதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

udhayanidhi

தற்போது அதே வழக்கு மற்றும் ரெய்டு நடவடிக்கைகளை முன்வைத்தே, திமுகவின், இந்தி எதிர்ப்பு போராட்டம் வாபஸ் பெற வைக்கப்பட்டிருப்பதாக சிலர் கூறுகின்றனர். இன்னொரு பக்கம், நாட்டின் பொருளாதார நெருக்கடி பற்றிய விமர்சனங்களை திசை திருப்ப, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கைது, இந்தி திணிப்பு போன்ற சர்ச்சைகள் மத்திய அரசுக்கு கைகொடுப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தி திணிப்பு விவகாரத்தில், திமுகவுக்கு வெற்றியா? பாஜகவுக்கு வெற்றியா? என்ற விவாதங்கள் எல்லாம், பற்றி எரியும் பிரச்சினையில் இருந்து, மக்களின் கவனத்தை வேறு திசைக்கு திருப்ப உதவும் காரணிகள் என்பதை தவிர வேறில்லை.