பாஜக பக்கம் சாய்கிறாரா திருமாவளவன்..? ஆளுநர் பின்னால் சுற்றும் மர்மம்..!

 

பாஜக பக்கம் சாய்கிறாரா திருமாவளவன்..? ஆளுநர் பின்னால் சுற்றும் மர்மம்..!

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளைக் கண்டித்தும், அங்கு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக் கோரியும் டெல்லியில் நேற்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்பாட்டத்தில் 14 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

 இதில் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதியின் எம்.பி.யுமான திருமாவளவன் பங்கேற்பார் என்று பார்த்த நிலையில் அவர் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, தவிர்க்க முடியாத காரணங்களால் தன்னால் கலந்து கொள்ளமுடியவில்லை என்று தெரிவித்தார்.

 இதன் எதிரொலியாக யூகங்களும், வதந்திகளும் றெக்கை கட்டி பறந்தன. திருமா பாஜக பக்கம் சாயத் தொடங்கிவிட்டார் என்கிற அளவுக்கு சமூகவலைத் தளங்களில் ஆளாளுக்கு கருத்து மழை பொழியத் தொடங்கினர். உண்மை என்ன? நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 27வது பட்டமளிப்பு விழா  நடைபெற்றது. பல்கலைக்கழகத்தில் உள்ள வ.உ.சி அரங்கத்தில் நடைபெற்ற விழாவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார்.

 இந்த பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் தொல்.திருமாவளவனுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. மதமாற்றம் ஒரு பார்வை என்ற தலைப்பில். திருமாவளவன் ஆய்வு கட்டுரை ஒன்றை சமர்ப்பித்தார். அந்த ஆய்வுக்காக  திருமாவளவனுக்கு முனைவர் பட்டம் கொடுக்கப்பட்டது.

இதில் பங்கேற்ற காரணத்தினாலேயே திருமாவால் டெல்லி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை என்கிறார்கள் சிறுத்தைகள். ஆளுநரை அவர் அடிக்கடி சந்தித்து பேசுவதும் அவர் பாஜக பக்கம் தாவுவதற்கு வாய்ப்புள்ளதாக சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.