பாஜக ஆபத்தான கட்சியா? ஈயம் பூசின மாதிரியும், பூசாத மாதிரியும் பதில் சொன்ன நடிகர் ரஜினிகாந்த்

 

பாஜக ஆபத்தான கட்சியா? ஈயம் பூசின மாதிரியும், பூசாத மாதிரியும் பதில் சொன்ன நடிகர் ரஜினிகாந்த்

பாஜக ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சிகள் நினைத்தால், கண்டிப்பாக அப்படி தானே இருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

சென்னை: பாஜக ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சிகள் நினைத்தால், கண்டிப்பாக அப்படி தானே இருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் கட்சி தொடங்கும் பணி, திரைப்படம் என பரபரப்பாக இயங்கி வரும் நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், பாஜக வுக்கு எதிராக தேசிய அளவில் மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு பாஜக ஆபத்தான கட்சியா என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரஜினி, அப்படி என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், அப்போது கண்டிப்பாக அப்படித் தானே இருக்கும் என்று பதிலளித்தார்.

மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்திய முறை தவறாக இருக்கிறது. அது பற்றி விரிவாக பேச வேண்டும் என்றார். சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடும் சட்டத்தை உடனடியாக இயற்றுவது அவசியம் என்றும் அப்போது ரஜினி கூறினார்.

பாஜக-வுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார். அவரது கருத்துகள் அனைத்தும் அதிகார வர்க்கத்திற்கு ஆதரவாக இருக்கிறது என பரவலாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், பாஜக ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சிகள் நினைத்தால், கண்டிப்பாக அப்படி தான் இருக்கும் என நழுவலாக ரஜினி பதிலளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.