பாஜக ஆட்சி சிறுபான்மையினருக்கு பாதுகாப்பா? ஓபிஎஸ் -க்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  கண்டனம்!

 

பாஜக ஆட்சி சிறுபான்மையினருக்கு பாதுகாப்பா? ஓபிஎஸ் -க்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  கண்டனம்!

கடந்த 5 ஆண்டுகளில் படுபாதகம் செய்து வந்த மோடி அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதற்கு  தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை: கடந்த 5 ஆண்டுகளில் படுபாதகம் செய்து வந்த மோடி அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதற்கு  தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னையில் 06/03/2019 புதன் அன்று அதிமுக சார்பில் நடத்தப்பட்ட பாஜக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் பொதுக்கூட்டத்தில் மோடியின் முன்னிலையில் பேசிய தமிழகத்தின் துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர் செல்வம் அவர்கள்..,

பாஜகவுடன் கூட்டணி வைப்பது மத சார்பின்மைக்கு எதிரானது என்பது அரசியல் பச்சோந்திகளின் தவறான பிரச்சாரம் என்றும், கடந்த 5 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் இந்திய நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக எங்குமே சிறு அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் சிறுபான்மையினரை மோடியின் அரசு அந்த அளவிற்கு பாதுகாத்துள்ளது என்றும் பேசியுள்ளார்.

காட்டு யானையை கட்டுச்சோற்றில் மறைக்கும் மோசடி வேலையை செய்துள்ளார் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம். கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் கொடுங்கோல் ஆட்சியில் இந்தியாவில் வாழும் சிறுபான்மை இஸ்லாமிய மற்றும் தலித் மக்கள் பட்ட துயரம் கொஞ்சநஞ்சமல்ல!

சிறுபான்மை மக்களையும் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களையும் மோடி தலைமையிலான அரசாங்கத்தில் உள்ளவர்கள் செய்த கொடுமைகள் சொல்லி மாளாது. மாட்டு இறைச்சியின் பெயரால் மாட்டின் பெயரால்  அப்பாவி முதியவர் அஹ்லாக் உள்ளிட்ட பல முஸ்லிம்கள் அடித்தே கொலை செய்யப்பட்டது மோடியின் ஆட்சியில்தான் என்பதை ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் எப்படி மறந்தார்?

2016 ஆம் ஆண்டு ஹரியானாவில் மாடுகளை விற்பனை செய்ய ஏற்றிச் சென்ற அப்பாஸ் என்ற  அப்பாவி வியாபாரியை அடித்தே கொலை செய்த பயங்கரவாதிகளின் செயல் மோடியின் ஆட்சியில்தான் நடந்தது என்பது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் கவனத்திற்கு வரவில்லையா?

2017 ஆம் ஆண்டு டெல்லியில் ஈத் பெருநாளைக்கு துணி எடுக்கச் சென்ற 17 வயது ஜூனைத் என்ற அப்பாவி சிறுவனை பயங்கரவாதிகள் அடித்தே கொலை செய்தது மோடியின் ஆட்சியில்தான் என்பது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்குத்  தெரியாதா?

2018 ஆம் ஆண்டில் டெல்லி மால்வியா நகரில் உள்ள மதரஸாவில் 8 வயதுடைய முகம்மது அசீம் என்ற சிறுவன் பாசிச பயங்கரவாதிகளால் துடிக்கத் துடிக்க அடித்துக் கொலை செய்யப்பட்டது மோடியின் ஆட்சியில்தான் என்பது ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு தெரியாமல் போனது எப்படி?

கோவில் கருவறைக்குள் வைத்து 12 வயது அப்பாவிச் சிறுமி ஆசிபாவை 7 நாட்கள் கதறக் கதறக் கூட்டுக் கற்பழிப்பு செய்து குப்பையில் பிணமாய் வீசப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் தீயாய் பற்றி எரிந்ததே அது ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு நினைவில்லையா?

பால் வியாபாரத்திற்கு மாடுகளை வாங்கிச் சென்ற முஸ்லிம் வியாபாரி மீது கொலை வெறித்தாக்குதல்கள் நடத்திய கும்பல்களின் பயங்கரவாதச் செயல் மோடியின் ஆட்சியில்தான் நடந்தது என்பது ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு மறந்து போனதா?

பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் வெறியாட்டம் ஆடும் பயங்கரவாதிகளின் ஆட்டம் துணைமுதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அவர்களின் கவனத்திற்கு வரவில்லையா? முத்தலாக் என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்களை சிறைக்கு அனுப்புவதற்கு பெருமுயற்சி எடுக்கும் மோடியின் ஆட்சியையா இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு என்று சொல்கின்றீர்கள்?

நாட்டில் சிறுபான்மையினருக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிராக நடக்கும் வன்முறை கணக்குகளை வருடா வருடம் வெளியிடும் ஆணையத்தின் அறிக்கைகளைக் கூட மோடியின் அரசாங்கம் தடுத்துள்ளதை துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவாரா?

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் வாழும் ஒவ்வொரு இஸ்லாமியர்களும் பாதுகாப்பற்றத் தன்மையுடன் வாழ்ந்து வருகின்றனர் என்பதும்,  மூன்றாந்தரக் குடிமக்களைப் போல நடத்தப்படுவதாகவுமே உணர்கின்றனர். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டு கால ஆட்சி சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான ஆட்சி என்று சொல்வதற்கு வெட்கப்பட வேண்டும்.

இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி தமிழக மக்களின் நலனுக்கும் துரோகம் இழைக்கும் ஒரு கட்சியை. தமிழக மக்கள் நஞ்சைப் போல வெறுக்கும் ஒரு கட்சியை பாதுகாப்பான கட்சி என்று சொல்வதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் மனசாட்சி எப்படி இடம் கொடுத்தது?

துணை முதல்வர் என்ற முக்கியப் பொறுப்பில் உள்ளவர் அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் பேசலாமா? என்று உங்களின் பேச்சை கேட்டு ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயமும் உங்களை நோக்கி கேள்வி எழுப்புகின்றார்கள். 

சிறுபான்மையினருக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளில் படுபாதகம் செய்து வந்த மோடி அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு என்றும், கடந்த 5 ஆண்டுகளில் இஸ்லாமியர்களுக்கு எதிராக எந்த சிறு அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என்று சொல்லியிருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பேச்சுக்கு தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்தின் கடும் கண்டனத்தை பதிவு செய்கின்றது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.