பாஜகவுடன் அதிமுக கூட்டணியா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

 

பாஜகவுடன் அதிமுக கூட்டணியா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமையும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். மேலும், பாஜகவோடு கூட்டணி அமைக்க அதிமுக தலைமை விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. அதேசமயம் அதிமுகவோடு கூட்டணி அமைத்தே தீரவேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது எனவும் கூறப்படுகிறது. இதற்கிடையே மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூட்டணி குறித்து நேற்று பேசுகையில், அதிமுக – பாஜக கூட்டணி அமைய வேண்டும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக அனைத்துக்கும் ஜால்ரா அடிக்காது, அன்னப்பறவை போல் பிரித்து பார்க்கும். எதிர்க்க வேண்டியதை எதிர்க்கும், ஆதரிக்க வேண்டியதை ஆதரிக்கும்.  மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பாஜகவைச் சேர்ந்தவர் அல்ல. பாஜக கூட்டணியில் உள்ளவர். எனவே, கூட்டணி தொடர்பாக, தனிப்பட்ட முறையில்தான் அத்வாலே கருத்து கூறியுள்ளார்; அது பாஜக தலைமையின் கருத்து அல்ல.  

பாஜவை விமர்சிக்கும் தம்பிதுரையின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்தே; அது அதிமுகவின் கருத்து அல்ல. தேர்தல் வரும்போதுதான் கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியும். தமிழகத்திற்கு நல்லது செய்பவர்களுடன் தான் அதிமுக கூட்டணி அமைக்கும். தற்போதைக்கு யாருடனும் கூட்டணி இல்லை என்றார்.