பாக்.,ராணுவம் என்னை நன்கு கவனித்துக் கொள்கிறது; விமானி அபிநந்தன் பேசிய முதல் வீடியோ!!

 

பாக்.,ராணுவம் என்னை நன்கு கவனித்துக் கொள்கிறது; விமானி அபிநந்தன் பேசிய முதல் வீடியோ!!

பாகிஸ்தான் ராணுவம் என்னை நன்கு கவனித்து கொள்கிறது என அந்நாட்டு ரானுவத்தால் கைது செய்யப்பட்ட அபிநந்தன் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம் என்னை நன்கு கவனித்து கொள்கிறது என அந்நாட்டு ரானுவத்தால் கைது செய்யப்பட்ட அபிநந்தன் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

புல்வாமா தீவிரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் எல்லைக்குள் நேற்று காலை புகுந்த இந்திய விமானப் படை அங்குள்ள தீவிரவாத முகாம்களை அழித்தது. அதில், 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இன்று காலை இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் இந்திய ராணுவ நிலைகளை தாக்க முயன்றது. ஆனால், பாதுகாப்பு படையின் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாகிஸ்தானின் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இந்த சண்டையில், பாகிஸ்தானின் ஒரு போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதனிடையே, இந்திய விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் அதில் ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும், அதிலிருந்த விமானிகள் இருவர் உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது. இது தொடர்பான வீடியோவை வெளியிட்ட பாகிஸ்தான், கைது செய்யப்பட்ட விமானியின் பெயர் அபிநந்தன் எனவும், மேலும் மற்றொரு விமானி படுகாயமடைந்துள்ளதால் அவர் சிகிச்சை  பெற்று வருவதாகவும் தெரிவித்தது.

அதேசமயம், பாகிஸ்தான் விமானத்துக்கு ‘மிக்’ ரக விமானம் மூலம் பதிலடி கொடுத்த இந்திய விமானி ஒருவர் திரும்பவில்லை என விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை உறுதிப்படுத்திய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரவீஷ் குமார், இந்திய விமானப்படையில் மிக் 21 பைசன் ரக விமானத்தை விமானியுடன் காணவில்லை. காணாமல் போன இந்திய விமானி தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமான விமானியின் நிலை குறித்த உண்மை நிலையை அறிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, மாயமான விமானி குறித்த தகவல் வெளியானது. அவரது பெயர் அபிநந்தன் எனவும், அவர் சென்னையை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. அவரை பாதுகாப்பாக மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் உள்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் என்னை நன்கு கவனித்து கொள்கிறது என அந்நாட்டு ரானுவத்தால் கைது செய்யப்பட்ட அபிநந்தன் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ஒருவரது கேள்விக்கு தேநீர் அருந்திய படி பதிலளிக்கும் அவர், தான் விங் கமாண்டர் அபிநந்தன் என கூறுகிறார். மேலும், கும்பல் ஒன்றிடம் இருந்து என்னை மீட்ட பாகிஸ்தான் ராணுவம் என்னை நன்கு கவனித்து கொள்கிறது. இந்த நிலைப்பாட்டை நாடு திரும்பினாலும் நான் மாற்றிக் கொள்ளமாட்டேன். இதைத்தான் இந்தியா ராணுவத்திடமிருந்து எதிர்பார்க்கிறேன். பாகிஸ்தான் ராணுவத்தின் செயல் என்னை கவர்ந்துள்ளது என்கிறார்.

நீங்கள் இந்தியாவின் எந்த பகுதியை சேர்ந்தவர், திருமணமாகி விட்டதா என்ற கேள்விக்கு, தான் தெற்கு பகுதியை சேர்ந்தவன் எனவும், தான் திருமணம் ஆனவன் என்றும் கூறும் அபிநந்தன், தான் எந்த வகையான போர் விமானத்தை இயக்கி வந்தேன் உள்ளிட்ட சில கேள்விகளுக்கு பதிலளிக்க மறுக்கிறார்.