பாகிஸ்தான் செல்ல துடியாய் துடிக்கும் சித்து! செக் வைக்கும் மத்திய அரசு!

 

பாகிஸ்தான் செல்ல துடியாய் துடிக்கும் சித்து! செக் வைக்கும் மத்திய அரசு!

சித்து பாகிஸ்தான் செல்ல வேண்டுமானால் அரசியல் அனுமதி கட்டாயம் பெற வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் நினைவாக பல 100 ஆண்டுகளுக்கு முன்பு தற்போது பாகிஸ்தான் பகுதியில் உள்ள கர்தார்பூரில் தர்பார் சாஹிப் குருத்வாரா கட்டப்பட்டது. இங்கு செல்வது சீக்கியர்களின் வாழ்நாள் கடமையாக கருதப்படுகிறது. அங்கு செல்ல வேண்டுமானால் பாகிஸ்தானுக்கு விசா எடுத்துதான் செல்ல வேண்டும். இதனால் பக்தர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

கர்தாபூர் குருத்வாரா 

இதனையடுத்து இந்தியாவின் தேரா பாபா நானக் குருத்வாராவுக்கும், கர்தார்பூர் குருத்வாரவுக்கும் இடையே வழித்தடம் அமைக்க இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது வழித்தடம் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. இந்திய பகுதியில் உள்ள கர்தார்பூர் வழித்தடத்தை அடுத்த மாதம் 8ம் தேதி பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பகுதியில் உள்ள கர்தார்பூர் வழித்தடத்தை அதற்கு அடுத்த நாள் (9ம் தேதி) அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானும்  தொடங்கி வைக்க உள்ளனர். 

ரவீஷ் குமார்

பாகிஸ்தான் பகுதியில் 9ம் தேதி நடைபெறும் கர்தாபூர் வழித்தடம் தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு பஞ்சாப் எம்.எல்.ஏ. நவ்ஜோத் சிங் சித்துவுக்கு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது. சித்துவும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் சித்து அரசியல் அனுமதி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் செல்ல முடியும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், கர்தாபூர் செல்ல வேண்டுமானால் சித்து மத்திய அரசிடம் அரசியல் அனுமதி பெற வேண்டும். அவர் மட்டுமல்ல பாகிஸ்தான் அழைப்பு விடுத்த மற்ற தலைவர்களும் அரசியல் அனுமதி பெற வேண்டும். இது போன்ற பயணத்துக்கு அரசியல் அனுமதி கோருவது சாதரண விதிமுறை என்பது எனது புரிதல் என தெரிவித்தார்.