பாகிஸ்தான் சிறையில் கடுமையான அழுத்தத்தில் இருக்கும் குல்பூஷன் ஜாதவ்…

 

பாகிஸ்தான் சிறையில் கடுமையான அழுத்தத்தில் இருக்கும் குல்பூஷன் ஜாதவ்…

ஏற்றுக்கொள்ளமுடியாத பாகிஸ்தானின் பொய் குற்றச்சாட்டால், அங்குள்ள சிறையில் கடுமையான அழுத்தத்தில் குல்பூஷன் ஜாதவ் உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

2017ல் பாகிஸ்தானில் பலுசிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மனு தாக்கல் செய்தது. இதனையடுத்து இதனை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுசீராய்வுக்கும், மறுபரிசீலனைக்கும் உட்படுத்த வேண்டும். மேலும் குல்பூஷன் ஜாதவுக்கு தூதரக அணுகலுக்கு அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது. 

சர்வதேச நீதிமன்றம்

குல்பூஷன் ஜாதவுக்கு தூதர உதவியை கிடைக்க அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து பல வாரங்கள் கழிந்துவிட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தூதர உதவிகளை வழங்க அனுமதி அளிப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது. இதனையடுத்து இஸ்லாமாபாத் சிறையில் இருக்கும் குல்பூஷன் ஜாதவை இந்திய தூதர அதிகாரி கவுரவ் அலுவாலியா நேற்று சந்தித்து பேசினார்.

குல்பூஷன் ஜாதவை சந்தித்த குடும்பம் ( கோப்பு படம்)

சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பு தொடர்பாக எந்தவொரு அதிகாரபூர்வமான அறிக்கையும் வெளிவரவில்லை. அதேசமயம், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இது குறித்த கூறுகையில், பாகிஸ்தானின் ஏற்றுக்கொள்ள முடியாத பொய் குற்றச்சாட்டுகள் மற்றும் உளவாளி என்று சொல்லும்படி பாகிஸ்தான் நிர்பந்தம் செய்வதால் குல்பூஷன் ஜாதவ் கடுமையான அழுத்தத்தில் உள்ளார் என தெரிவித்தார்.