பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்ட பெண்…… எங்க கட்சிக்கும் அந்த பெண்ணும் சம்பந்தமில்லை… விளக்கம் கொடுத்த ஓவைசி….

 

பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்ட பெண்…… எங்க கட்சிக்கும் அந்த பெண்ணும் சம்பந்தமில்லை… விளக்கம் கொடுத்த ஓவைசி….

பெங்களூருவில் ஓவைசி கலந்து கொண்ட குடியுரிமை திருத்த எதிர்ப்பு கூட்டத்தில் பெண் ஒருவர் பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அந்த பெண்ணுக்கும் எங்க கட்சிக்கும் சம்பந்தமில்லை என ஓவைசி விளக்கம் கொடுத்தார்.

பெங்களூருவில் நேற்று குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைப்பாளர்களின் அழைப்பை ஏற்று ஹைதராபாத் எம்.பி.யும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவருமான அசாதுதீன் ஓவைசி கலந்து கொண்டார். அவர் மேடைக்கு வந்த பிறகு, அரசியலமைப்பை காப்போம் என்ற பெயரில் அந்த கூட்டத்தை நடத்தும் அமைப்பாளர்கள் அமுல்யா என்ற பெண்ணை பேச அழைத்தனர்.

பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்ட பெண்

அந்த பெண் மேடை ஏறிய உடன் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூறியதுடன் மற்றவர்களையும் கூறும்படி கூறினார். உடனே ஓவைசி எழுந்து சென்று அந்த பெண்ணிடமிருந்து மைக்கை பறித்து, அந்த பெண்ணை மற்றவர்களுடன் இணைந்து மேடையிலிருந்து கீழே இறக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் அந்த பெண் பிடிவாதமாக மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கத்தை எழுப்பினார்.பின்னர் காவல்துறை தலையிட்டு அந்த பெண்ணை மேடையிலிருந்து கீழே இறக்கினர்.

அசாதுதீன் ஓவைசி

இதனை தொடர்ந்து அசாதுதீன் ஓவைசி பேசுகையில், அந்த பெண்ணின் பேச்சு எனக்கு உடன்பாடில்லை. எனக்கும் எனது கட்சிக்கும் அந்த பெண்ணுடன் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் அவளை கண்டிக்கிறோம். அமைப்பாளர்கள் அவளை இங்கு அழைத்திருக்கக்கூடாது. இது எனக்கு தெரிந்திருந்தால் நான் இங்கு வந்திருக்கமாட்டேன். நாங்கள் இந்தியாவுக்காக இருக்கிறோம். எங்கள் எதிரி நாடான பாகிஸ்தானை ஆதரிக்க மாட்டோம். எங்களது முழு முயற்சியும் இந்தியாவை காப்பாற்றுவதாகும் என தெரிவித்தார்.