பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் – பெங்களூருவில் கல்லூரி மாணவி தேசத் துரோக வழக்கில் கைது

 

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் – பெங்களூருவில் கல்லூரி மாணவி தேசத் துரோக வழக்கில் கைது

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் ஆங்காங்கே குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெங்களூரு சுதந்திர பூங்காவிலும் நேற்று போராட்டம் நடைபெற்றது. அப்போது ஒரு கல்லூரி மாணவி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேச மேடையேறினார். ஆனால் மேடையில் ஏறிய அந்த மாணவி திடீரென்று பாகிஸ்தானுக்கு ஆதரவாக, “பாகிஸ்தான் வாழ்க, வாழ்க!” என்று கோஷமிட்டார். அந்த மாணவியின் இந்த திடீர் செயல் மேடையில் இருந்தவர்களையும், அங்கு கூடியிருந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சிறப்பு விருந்தினராக இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஓவைசி எம்.பி. உள்ளிட்டோர் மாணவியின் கையில் இருந்த மைக்கை பிடுங்க முயன்றனர். ஆனால் அவர் மைக்கை கொடுக்க மறுத்து விட்டார். மாறாக இந்தியாவுக்கு ஆதரவாகவும் கோஷமிட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த மாணவியை தேசத் துரோக வழக்கில் அங்கிருந்த போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். உப்பார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அவர் அழைத்து செல்லப்பட்ட அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த மாணவி சிக்மகளூரு மாவட்டம் கொப்பாவை சேர்ந்த அமுல்யா லியோனா (வயது 19) என்பதும், கல்லூரியில் பி.ஏ. படித்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.