பாகிஸ்தானில் கர்தாபூர் குருத்வாரா இருக்கும் மாவட்டத்தில் தீவிரவாத முகாம்கள்- உளவுத் துறை எச்சரிக்கை

 

பாகிஸ்தானில் கர்தாபூர் குருத்வாரா இருக்கும் மாவட்டத்தில் தீவிரவாத முகாம்கள்- உளவுத் துறை எச்சரிக்கை

பாகிஸ்தானில் கர்தாபூர் குருத்வாரா இருக்கும் நரோவல் மாவட்டத்தில் தீவிரவாத முகாம்கள் செயல்படுவதாக உளவுத் துறை எச்சரிக்கை செய்துள்ளது.

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் நினைவாக பல 100 ஆண்டுகளுக்கு முன்பு தற்போது பாகிஸ்தான் பகுதியில் உள்ள கர்தார்பூரில் தர்பார் சாஹிப் குருத்வாரா கட்டப்பட்டது. இங்கு செல்வது சீக்கியர்களின் வாழ்நாள் கடமையாக கருதப்படுகிறது. இந்தியாவின் தேரா பாபா நானக் குருத்வாராவுக்கும், கர்தார்பூர் குருத்வாரவுக்கும் இடையே வழித்தடம் அமைக்க இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த ஆண்டு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதற்கான பணிகள் முடிவடைந்து இன்னும் சில நாட்களில் இந்த வழித்தடம் திறக்கப்பட உள்ளது.

கர்தாபூர் வழித்தடம்

இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கர்தார்பூர் குருத்வாரா இருக்கும் நரோவல் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் செயல்பட்டு வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. இது தொடர்பாக உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மகாணத்தில் முரிட்கே, ஷாகர்கர் மற்றும் நரோவல் ஆகிய மாவட்டங்களில் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் கணிசமான அளவில் ஆண்கள் மற்றும் பெண்கள் பயிற்சி பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் எல்லை நிர்வாகம் தொடர்பான விவகாரங்கள் குறித்து நாட்டின் முக்கிய பாதுகாப்பு முகமைகள் இணைந்து மேற்கொண்ட ஆலோசனை கூட்டத்தில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள்

இந்தியாவில், காலிஸ்தான் விவகாரத்தில் சீக்கியர்களின் ஆதரவு பெறுவதற்காகத்தான் பாகிஸ்தான் கர்தாபூர் வழித்தடத்தை திறப்பதில் ஆர்வமாக உள்ளதாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை செய்து இருந்தது. மேலும், இந்திய எல்லைக்குள் 3 முதல் 4 கி.மீட்டர் தொலைவுக்கு பாகிஸ்தானின் மொபைல்  நெட்வொர்க் சிதறுவதை போதை மருந்து கடத்தல்காரர்கள் பயன்படுத்துகின்றனர். பாகிஸ்தானின் சிம்கார்டை பயன்படுத்தி தேச விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். பாகிஸ்தான் சிம்கார்ட் பயன்படுத்த மற்றும் வைத்திருக்க தடை விதிக்குமாறு பஞ்சாப் போலீசுக்கு மத்திய அமைப்புகள் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.