பழங்குடியினர் சலுகைகள் மறுக்கப்படுவதால் சீர்மரபினர் பெயர் மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு

 

பழங்குடியினர் சலுகைகள் மறுக்கப்படுவதால் சீர்மரபினர் பெயர் மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு

சீர்மரபினர் சமூகம் பழங்குடியினர் சலுகையை பெற அவர்களை சீர்மரபினர் பழங்குடியினர் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை: சீர்மரபினர் சமூகம் பழங்குடியினர் சலுகையை பெற அவர்களை சீர்மரபினர் பழங்குடியினர் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் டிஎன்சி (DNC) என அழைக்கப்பட்ட சீர்மரபினர் சமூகத்தினர் இனி மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை பெற வசதியாக டின்என்டி (DNT) அதாவது சீர்மரபினர் பழங்குடியினர் என்று அழைக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து எம்.எல்.ஏ கருணாஸ், தொடந்து சட்டமன்றத்தில் இதுபற்றி எடுத்துரைத்தேன். நான் மட்டுமன்றி பலர் போராடினர். இப்போது தமிழக அரசு செவி சாய்த்துள்ளது. அதே சமயம் முரண்பாடுகளானவற்றையும் களையவேண்டும் என்றார்.

இதுதொடர்பாக பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், சீர்மரபினர் சமூகத்தினரை சீர் மரபினர் பழங்குடியினர் என அழைக்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சீர்மரபினர் பிரிவில் 68 சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்கள் 1979-ஆம் ஆண்டுக்கு முன் வரை சீர் மரபினர் பழங்குடியினர் என அழைக்கப்பட்டு வந்தனர். 1979-ஆம் ஆண்டுக்கு பிறகு அவர்களை சீர்மரபினர் என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதனால் தங்களுக்கு பழங்குடியினருக்கான சலுகைகள் மறுக்கப்படுவதாகவும் மீண்டும் சீர்மரபினர் பழங்குடியினர் என மாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன. இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வருவாய் நிர்வாக முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் 1979-ஆம் ஆண்டு அரசாணையை திரும்பப் பெற்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.