பள்ளி திறந்து 15 நாட்களாகியும் இன்னும் புத்தகங்கள் கொடுக்கவில்லை! தமிழக அரசால் கேள்விகுறியாகும் கல்வி!!

 

பள்ளி திறந்து 15 நாட்களாகியும் இன்னும் புத்தகங்கள் கொடுக்கவில்லை! தமிழக அரசால் கேள்விகுறியாகும் கல்வி!!

சில பள்ளிகளில் இணையதளத்தில் உள்ள இ புத்தகத்தைக் கொண்டு பாடங்களை நடத்தி வருவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்

தமிழகத்தில் 2,3,4,5,7,8,10,12ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி திறக்கப்பட்ட அன்றே பாடப்புத்தக்கங்கள் வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், இன்னும் பல இடங்களில் புத்தகங்கள் வழங்கப்படவில்லை என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். சில பள்ளிகளில் இணையதளத்தில் உள்ள இ புத்தகத்தைக் கொண்டு பாடங்களை நடத்தி வருவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்

3,4,5,8ஆம் வகுப்புகளுக்கான புத்தகங்களின் அச்சடிப்புப் பணிகளே தாமதமாகத்தான் தொடங்கி இருக்கின்றன. ஏற்கனவே முழுமையாக விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படும் இதர வகுப்புகளுக்கும் புத்தகங்கள் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வெயில், தண்ணீர் தட்டுப்பாடுகளைத் தாண்டி புத்தகங்களே இல்லாமல் வகுப்புகள் நடப்பதாகக் கூறுகின்றனர் மாணவர்கள்.

3,4,5,8 ஆகிய வகுப்புகளுக்கு அடுத்தாண்டு முதல் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், இந்தாண்டே அறிமுகப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதால், பாடத்திட்டத் தயாரிப்பே தாமதமாகத்தான் நிறைவடைந்ததாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  இதனால், புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. எனினும், இதர வகுப்புகளுக்கு புத்தகங்கள் கிடைக்காதது குறித்து விளக்கம் ஏதும் வழங்கப்படவில்லை.