பள்ளி கட்டணம் வசூலிக்க மூன்று மாதங்களுக்கு தடை விதித்து அரசாணை வேண்டும்! – ராமதாஸ் வலியுறுத்தல்

 

பள்ளி கட்டணம் வசூலிக்க மூன்று மாதங்களுக்கு தடை விதித்து அரசாணை வேண்டும்! – ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க மூன்று மாதங்களுக்கு தடை என்று அமைச்சர் கூறியுள்ள நிலையில், அது தொடர்பான அரசாணையை வெளியிட வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்களில் கூறியிருப்பதாவது:

“தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் செலுத்த 3 மாத அவகாசம் வழங்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வந்த நிலையில், தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வியமைச்சர் செங்கொட்டையன் அறிவுறுத்தியுள்ளார். இது வரவேற்கத்தக்கது.

ஆனால், கல்வியமைச்சரின் அறிவுரையை எத்தனை பள்ளிகள் பின்பற்றும் என்பது தெரியவில்லை. ஆகவே, தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணங்களை அடுத்த 3 மாதங்களுக்கு வசூலிக்கக் கூடாது என்று அரசாணை பிறப்பிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்!” என்று கூறியுள்ளார்.

கொரொனா பரவுதல் தொடர்பான மற்றொரு ட்வீட்டில், “கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள இடத்திலிருந்து 7கி.மீ சுற்றளவில் வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது. தேவைப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் வீடு, வீடாக இத்தகைய ஆய்வை நடத்த அரசு தயாராக வேண்டும்!” என்று கூறியுள்ளார்.