பல்லுயிர் மேலாண்மை குழுக்களையும், மரங்கள் ஆணையத்தையும் உடனடியாக ஏற்படுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

 

பல்லுயிர் மேலாண்மை குழுக்களையும், மரங்கள் ஆணையத்தையும் உடனடியாக ஏற்படுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி பல்லுயிர் மேலாண்மை குழுக்களையும், மரங்கள் ஆணையத்தையும் பினாமி தமிழக அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி பல்லுயிர் மேலாண்மை குழுக்களையும், மரங்கள் ஆணையத்தையும் பினாமி தமிழக அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான பல்லுயிர் மேலாண்மைக் குழுக்களையும், மரங்கள் ஆணையத்தையும் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. தமிழகத்தின் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான இந்த இரு அமைப்புகளையும் அமைக்கும் விஷயத்தில் தமிழக ஆட்சியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாக அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.

சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக பா.ம.க. இளைஞரணித் தலைவரும், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தொடர்ந்த வழக்கில் தான் சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஆணையை பிறப்பித்துள்ளது.  தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான முன் நிபந்தனைகளில் முக்கியமானது சாலைத் திட்டங்களால் பல்லுயிர் வாழிடங்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா? என்பது தான். ஆனால், தமிழகத்தில் பல்லுயிர் வாழிடங்களை நிர்வகிப்பதற்கான பல்லுயிர் மேலாண்மைக் குழுக்களோ, பல்லுயிர் பதிவேடுகளோ உருவாக்கப்படவில்லை என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சார்பில் நீதிபதிகளிடம் எடுத்துக்கூறப் பட்டது. அதை ஏற்றுத் தான் தமிழகத்தில் பல்லுயிர் மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்படாதது ஏன்? என்று கேட்ட நீதிபதிகள், மரங்கள் சட்டம் உடனடியாக நிறைவேற்றப்படுமா? என்றும் வினவியுள்ளனர்.

ஒரு மாநிலத்தின் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான மிக முக்கியமான அமைப்பு பல்லுயிர் மேலாண்மைக் குழுக்கள் ஆகும். ஒவ்வொரு கிராமத்திலும் முழுமையான நிதி ஆதாரத்துடன் பல்லுயிர்  மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் அந்த கிராமத்தில் உள்ள அனைத்து தாவரங்கள் உள்ளிட்ட பல்லுயிர்களும் பட்டியலிடப்பட்டு பதிவேடு தயாரிக்கப்படும். பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ள  பல்லுயிர்களையும், இயற்கை வளங்களையும் எவரும் விருப்பம் போல பயன்படுத்த முடியாது. உதாரணமாக ஆந்திரத்தில் ஒருவர்  ஏற்றுமதிக்காக வேப்பிலைகளை சொற்ப தொகை கொடுத்து பறித்துச் சென்ற   நிலையில், பல்லுயிர் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்ட பின்னர் வேப்பிலைக்கான விலை 3 மடங்காக  உயர்த்தப்பட்டது. பல்லுயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மணல் கொள்ளை போன்றவையும் இந்த குழுவால் தடை செய்யப்படும். மொத்தத்தில் பல்லுயிர் மேலாண்மைக் குழுக்கள் இயற்கை ஆர்வலர்களுக்கு வரமாகவும்,  இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கத் துடிப்பவர்களுக்கு சாபமாகவும் அமையும்.

ஊராட்சி நிலையிலிருந்து மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் பல்லுயிர் மேலாண்மை அமைப்புகளை ஏற்படுத்தும் நோக்குடன் தேசிய பல்லுயிர் சட்டம் கடந்த 2002-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. கிட்டத்தட்ட அந்தக் காலத்தில் தான் தமிழகத்தில் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியது. பல்லுயிர் மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டால் இயற்கை வளக் கொள்ளையை தொடர முடியாது என்பதற்காகவே அதை தமிழகத்தை ஆண்ட கட்சிகள் தவிர்த்து வருகின்றன.

அதேநேரத்தில் நாடு முழுவதும் 37,769 பல்லுயிர் மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 23,743 குழுக்கள், கர்நாடகத்தில் 4,636 குழுக்கள், கேரளத்தில் 1043 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானாவில் கூட 710 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் இதுவரை 19 குழுக்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், மரங்களை பாதுகாப்பதற்காக மரங்கள் ஆணையத்தை அமைக்கும்படி 2007-ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. இரு மாதங்களில் இந்த ஆணையத்தை அமைக்க ஒப்புக் கொண்ட தமிழக அரசு, அதன்பின் 12 ஆண்டுகளாகியும் அதற்காக துரும்பைக் கூட அசைக்க வில்லை. தமிழகத்தில் பல்லுயிர் மேலாண்மைக் குழுக்களையும், மரங்கள் ஆணையத்தையும் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஒரே கட்சி பா.ம.க. தான். 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பின் கீழ்  இதற்கான வாக்குறுதியை பா.ம.க. வழங்கியிருந்தது. 

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி 2016-ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கையெழுத்து இயக்கம் நடத்தினார். பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சருக்கு பல கடிதங்கள் எழுதப்பட்டன. ஆனால், இயற்கை வளக் கொள்ளை அரசு அவற்றையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. ஆனால், இப்போது இந்த அமைப்புகளை ஏற்படுத்தும்படி உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களுக்கு அடுத்தபடியாக பல்லுயிர் வளங்களைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு தான். இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் தமிழகம் வெறும் 4% மட்டுமே எனும் நிலையில், நாட்டின் மொத்த பல்லுயிர் வளங்களில் 33% தமிழகத்தில் தான் உள்ளது என்பது பெரும் வரமாகும். அந்த வரம் சாபம் ஆகாமல் தடுக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி பல்லுயிர் மேலாண்மை குழுக்களையும், மரங்கள் ஆணையத்தையும் பினாமி தமிழக அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.