பலன் கொடுக்க தொடங்கிய பல மடங்கு அபராதம்! குறைந்தது போக்குவரத்து விதிமுறை மீறல்கள்

 

பலன் கொடுக்க தொடங்கிய பல மடங்கு அபராதம்! குறைந்தது போக்குவரத்து விதிமுறை மீறல்கள்

கடுமையான அபராதம் விதிக்கப்படுவதால் டெல்லியில் கடந்த செப்டம்பரில் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் 66 சதவீதம் குறைந்துள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சாலையில் ஒழுக்கத்தை கொண்டு வரும் நோக்கிலும், விபத்துக்களால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்கும் நோக்கிலும் மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டது. திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில், சிறு சிறு போக்குவரத்து விதிமீறல்களுக்கும் கூட முன்பு இருந்ததை காட்டிலும் பல மடங்கு அபராத தொகை உயர்த்தப்பட்டது. பல மாநில அரசுகள் அபராத தொகையை குறைக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தின.

போலீசார் சோதனை

ஆனால் அபராத தொகையை குறைக்க முடியாது வேண்டும் என்றால் மாநில அரசுகள் குறைத்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்து விட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்தது. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் கடுமையான அபராத தொகையை செலுத்தினர். சில இடங்களில் விதிமுறை மீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு சுமார் ரூ.90 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

சாலை விதி மீறல்

இந்நிலையில், திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தால் டெல்லியில் போக்குவரத்து விதிமீறல்கள் 66 சதவீதம் குறைந்துள்ளதாக டெல்லி காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், கடந்த செப்டம்பரில் பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபட்டதாக 1.73 லட்சம் அபராத ரசீதுகள் வழங்கப்பட்டது. இருப்பினும் 2018 செப்டம்பரில் 5.24 லட்சம் அபராத ரசீதுகள் வழங்கப்பட்டு இருந்தது. திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தால்தான் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் குறைந்துள்ளது என தெரிவித்தார்.