பரபரப்பான அரசியல் சூழலில் நாளை மறுநாள் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்

 

பரபரப்பான அரசியல் சூழலில் நாளை மறுநாள் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்

கர்நாடக மாநிலத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.

கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மஜத தலைமையில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மஜத கட்சியின் குமாரசாமி கர்நாடக மாநில முதல்வரானார்.

அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ், மஜத கட்சி, குமாரசாமி அரசுக்கு ஆதரவளித்து வரும் சுயேட்சை எம்எல்ஏ-க்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை பிடிக்கும் முயற்சிகளில் பாஜக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

கர்நாடக நீர் மேலாண்மைத்துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சிவக்குமார், கர்நாடகத்தில் “ஆபரேஷன் லோட்டஸை”  பாஜக தொடங்கியுள்ளது. மும்பையில் உள்ள ஹோட்டலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏ-க்களுடன் பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி பேரம் பேசி வருவதாகவும், குதிரை பேரம் நடைபெற்று வருவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

மொத்தம் 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக  காங்கிரஸ், மஜத, சுயேட்சை எம்எல்ஏ-க்கள் என 119 பேர் இருந்த நிலையில், சுயேட்சை எம்.எல்.ஏக்களான ஹெச்.நாகேஷ் மற்றும் ஆர்.சங்கர் ஆகியோர் அரசுக்கு அளித்து வந்த தங்கள் ஆதரவை நேற்று வாபஸ் பெற்றனர். இதற்கான கடிதத்தை ஆளுநருக்கு அவர்கள் அனுப்பியுள்ளனர். இதனால், கர்நாடக அரசியலில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.

இந்நிலையில், கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.